புயல் சேத பகுதிகளை சீரமைக்கக் கோரி அறந்தாங்கி அருகே இன்று மறியல்

ஆலங்குடி: கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பல இடங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதை கண்டித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் 3 நாட்களாக குடிநீர், மின்சாரம் இல்லை, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் வரவில்லை. இதை கண்டித்து 300க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சி தேத்தான்பட்டி கிராமத்தில் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கடந்த 3 நாட்களாக இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி குடிநீரும் கிடைக்கவில்லை. மேலும் ஏராளமான வீடுகளும் புயலால் சேதம் அடைந்துள்ளன. நேற்று வரை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் வரவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் அதிகாரிகள் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திருவரங்குளம் கடைவீதிக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவரை அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த மக்கள் புயலால் முறிந்து விழுந்த மரங்களை ரோட்டில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து அதிரடிபடை போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். போலீசார் நடத்திய தடியடியில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதே போல் திருவரங்குளம் அருகே பாரதியார்நகரில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். வம்பன்நாலுரோட்டில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாத அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

புயல் சேத பகுதிகளை அதிகாரிகள் பார்க்க வராததை கண்டித்து புதுக்கோட்டை அருகே ரைஸ்மில் பஸ் நிறுத்தத்தில் எம்.குளவாய்பட்டி, வடவாளம் உள்பட 5 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 5 மணி நேரம் போராட்டம் நடந்தது. அதிகாரிகள் யாரும் வராததால் ஏற்கனவே அங்கு சிறைபிடிக்கப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதிமொழி அளித்ததால் அவர்கள் கலைந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: