வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

நா தராங்: வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. வியட்நாமில் கடந்த சில வாரங்களாக  கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் நா தராங் (Nha Trang) எனும் நகரில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவுக்கு 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடுமையான நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. ஆபத்தான பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில்  600-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் விரைவில் முடிவடைந்து இயல்பு நிலை திரும்பும் என்றும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் வியட்நாம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வியட்நாம் வரலாற்றிலே கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் 389 பேர் பலியான சம்பவம், அந்நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வியட்நாமில் வெள்ளம் மற்றும் புயலால் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: