பாகிஸ்தானில் சுமார் 2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை: மனித உரிமைகள் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்

பாகிஸ்தானில் சுமார் 2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை எனவும், அவர்களுள் பெரும்பாலானோர் சிறுமிகள் என்பதும் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் பதவியேற்ற புதிய அரசின் தேர்தல் அறிக்கையில், சுமார் 2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை எனவும், அவர்களுள் பெரும்பாலானோர் சிறுமிகள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பள்ளி செல்லும் வயதில் உள்ள சிறுமிகளுள் 32 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்வதில்லை எனவும், 21 சதவீத சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் 59 சதவீத மாணவிகள் ஆறாம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக் கொள்கின்றனர். இது மாணவர்களிடம் 49 சதவீதமாகக் காணப்படுகிறது. வெறும் 13 சதவீத மாணவிகளே ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கல்விக்கு 4 முதல் 6 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வரை 2.8 சதவீதம் மட்டுமே பாகிஸ்தான் கல்விக்காக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஓஸ்லோ கல்வி வளர்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கல்வி வழங்குவதில் மோசமான நாடுகள் பட்டியலில், பாகிஸ்தானும் இடம்பெற்றிருந்தது. மேலும் கல்வி அளிப்பதில் பாகிஸ்தான் அரசின் தோல்வி கோடிக்கணக்கான மாணவிகளைப் பாதித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போதிய வசதிகள் இல்லாததால், மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் தற்போது பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை என மனித உரிமைகள் அமைப்பு நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: