பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்: 400-க்கும் மேற்பட்டோர் காயம்

பாரிஸ்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிரிஸ்டோப் கேஸ்டனர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் 28 பேர் காவல்துறையை சேர்ந்தவர்களாவர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மீண்டும் அதிகரித்து வருவதால், பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது.

இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக உயர்ந்தது. மேலும் ஜனவரி 1-ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அதிபர் இம்மானுவல் மெக்ரான் அறிவித்தார். இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு இடங்களில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகரின் முக்கிய சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் கற்கள், மரங்கள் போன்றவற்றை போட்டு வழிமறித்தனர். நகரில் ஆங்காங்கே டயர்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 157 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: