×

தள்ளுபடிக்கு மயங்கலாமா?

தீபாவளி முடிந்துவிட்டது. இனி வரிசையாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல்ன்னு பண்டிகை தான். இந்த காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை, அணிகலன்கள் வரை அனைத்துப் பொருட்களும் நினைக்கவே முடியாத தள்ளுபடியில் கிடைக்கும். தள்ளுபடியில் கிடைக்கும் பொருட்களை எப்படி வாங்கவேண்டும். அவை தரமானதா என்று எப்படி தெரிந்து கொள்வது?
- சின்னராசு, சேலம்.

‘‘மார்க்கெட்டில் பல பொருட்கள் உள்ளன. உதாரணத்துக்கு குளிக்கும் சோப்பை எடுத்துக் கொள்வோம். அதிலேயே பல வகைகள் உண்டு. சந்தனம், ஆயுர்வேதம், வேம்பு, பழங்கள், ரோஜா... என ஒரு பெரிய பட்டியலே போடலாம். சோப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக உற்பத்தி செய்கின்றன. நமக்கு பிடித்த சோப்பை தான் நாம் வாங்குவோம். சந்தன குணம் கொண்ட சோப்பை பயன்படுத்துபவர், ‘சாண்டல்’ மட்டும்தான் வாங்குவார். மற்றதை வாங்கமாட்டார். புதிய பிராண்டையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்” என்று விளக்கம் அளித்தார் மார்க்கெட்டிங் ஆலோசகரான எஸ்.எல்.வி.மூர்த்தி.

“வாடிக்கையாளர்கள் எந்த Brandக்கு பழகி இருக்கிறார்களோ அதை மட்டும்தான் பயன்படுத்துவார்கள். மார்க்கெட்டில் இதை, 4P என்பார்கள். பிராடக்ட்(Product), பிரைஸ் (Price), புரொமோஷன் (Promotion), பிசிகல் டிஸ்ட் ரிபியூஷன் (Physical Distribution). பிராடக்ட், விற்பனைக்கு வரக் கூடிய பொருள். தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு என்றால், அந்த ஷாம்புவை மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டும். அதற்கு கையாலும் உத்திதான் மார்க்கெட்டிங்.

விலை கொண்டு  பதிவு செய்யலாம். மற்ற ஷாம்புவை விட விலை குறைவு, தரத்தில் இல்லைன்னு விளம்பரம் செய்வாங்க. விலையில் என்ன மாற்றம் செய்தாலும், ஷாம்புவில் சேர்க்கப்படும் ரசாயன பொருட்கள் ஒன்று தான். அதில் சேர்க்கப்படும் மணம் மற்றும் சில ஒப்பற்ற குணங்கள்தான் மாறுபடும். பொடுகுக்கு, முடி கொட்டாமல் இருக்க, முடி அடர்த்தியாக வளர... இப்படி.

இதைத்தான் பிரைஸ், புரொமோஷன், பொசிஷனிங் என்பார்கள். மக்கள் அதிகம் புழங்கக் கூடிய இடங்களில் இருக்கும் கடைகளில் கிடைக்க வேண்டும் என்று மெனக்கெடுவது, பிசிகல் டிஸ்ட்ரிபியூஷன். எந்த பொருளாக இருந்தாலும் தரத்தை கொண்டு தான் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருட்களுக்கும், சாலையோர கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கும் விலையில் மட்டுமல்ல, தரத்திலும் வித்தியாசம் உண்டு.

கடை வாடகை, பணியாட்களுக்கு சம்பளம், மின் கட்டணம்... எனபல விஷயங்கள் கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு பின்னால் இருக்கின்றன. அதே நேரம் தரத்துக்கும் குறைந்த பட்ச உத்தரவாதம் உண்டு என்பதை மறுக்கக் கூடாது. காரணம், மக்கள் மத்தியில் குறிப்பிட்ட அவர்களது கடைக்கு என்று ஒரு பெயர் இருக்கும். அதைகெடுத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள். சாலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு கடை வாடகை, ஆட்களுக்கு சம்பளம்... என எதுவுமே கிடையாது.

அதனால் அவர்கள் விற்கும் பொருட்களின் விலையும் குறைவு. இப்படி விற்பவர்களில் இரு பிரிவினர் உண்டு. ஒரு பிரிவினர், எந்தபொருளையும் விற்க தயாராக இருப்பார்கள். மற்றவர், தரமான பொருளை மட்டுமே விற்கவேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பார். இந்த இரண்டாவது பிரிவை சேர்ந்தவர்கள் மற்ற நடைபாதை வியாபாரிகளை விட கொஞ்சம் கூடுதலான விலைக்கு விற்பார்கள். தரமாக இருப்பதால் இவர்களை தேடி வந்து வாங்குவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கும்.

முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அவசியமான ஒரு பொருளை எங்கு வாங்குவது? உதாரணத்துக்கு செருப்பு. சாலையோர கடைகளில் ரூ.100க்கு காலணி கிடைக்கிறது. ஷோரூம் என்றால் ரூ.400. பணத்தை மிச்சப்படுத்த ரூ.100க்கு வாங்க முடிவு செய்கிறோம். அது ஒரு மாதம் தாக்குப்பிடிக்கும். அதன் பிறகு அறுந்து போகும். குதி காலில் வலி ஏற்படும். மீண்டும் ரூ.100க்கு இன்னொரு ஜோடி செருப்பை வாங்குவோம். இப்படியே ஒரு வருடத்துக்கு வாங்கினால் செருப்புக்கு மட்டுமே ரூ.1200 செலவு செய்து இருப்போம்.

ஷோரூமில் விலை அதிகம் என்றாலும் குறைந்தது ஆறு மாதங்கள் உழைக்கும். குதிகால் பிரச்னையும் ஏற்படாது. ஒரு வருடத்துக்கு ரூ.800. காலணி என்றில்லை. அனைத்து பொருட்களுக்குமே இது பொருந்தும். உடனடி தேவைக்கு விலை குறைவானதை வாங்குவதை விட, நீண்ட நாள் உழைப்புக்கு எது தாங்கும் என யோசித்து செயல்படுவதே சிறந்தது. இன்றைய உலகம் கன்ஸ்யூமர்களின் உலகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதோ ஒரு பொருளை வாங்க சொல்லி  விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன.

பொருட்களை வாங்குவது தவறில்லை. நமக்கு பயன்படும் என்றால், நிச்சயம் வாங்கலாம். வாங்கும் முன் கண்டிப்பாக நமக்குத் தேவையா, அந்தப் பொருள் இல்லாமல் நம்மால் வாழ முடியாதா, வாங்கும் பொருளை நம்மால் பராமரிக்க முடியுமான்னு ஒன்றுக்கு பலமுறை யோசித்து வாங்க வேண்டும். வாங்குவதுன்னு முடிவு செய்தவுடன், எத்தனை மாதங்கள், வருடங்கள் தாக்குப் பிடிக்கும்ன்னு  ஆராயவேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். இன்று அவசியத்துக்காக வாங்குவதை விட அனாவசியத்துக்காக வாங்குவதுதான் அதிகம்.

பணக்காரனோ ஏழையோ எல்லாருக்கும் தேவையான பொருட்கள் உண்டு. அதில் முக்கியமானது உணவு. சாப்பிடவில்லையென்றால் சிந்திக்கமுடியாது. உயிர் வாழ முடியாது. அடுத்தது, உடை. இயற்கையின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உடை அவசியம். மூன்றாவது வீடு. நான்காவது உறவு, நட்பு. ஐந்தாவது, புகழ். இதற்கு அப்பால் தான் நாம் வாங்கும் பொருட்கள். நான் பயன்படுத்துவது அனைத்தும் ஆடம்பரம்தான். பக்கத்து வீட்டில் 32 இன்ச் டி.வி இருக்கிறது என்றால், நம் வீட்டில் 52 இன்ச் டி.வி இருக்கணும்.

கடன் கொடுக்க பல வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு காத்து இருக்கின்றன. நாம் வசிக்கும் வீட்டுக்கு  அவ்வளவு பெரிய டி.வி தேவையா ? வருமானத்தில் ஒரு பகுதி தவணைக்கு சென்றுவிட்டால் அது கஷ்டமாக இருக்காதா ? என்றெல்லாம் நாம் யோசிப்பதில்லை. டி.வி அளவு எப்படியிருந்தாலும் அதில் தெரியும் காட்சி ஒன்றுதான் என்பதை உணர்ந்தாலே போதும்.

டிவிக்கு மட்டும் இல்லை இது மற்ற பொருட்களுக்கும் பொருந்தும். விழா காலங்களில் டிஸ்கவுண்டில் பொருட்கள் கிடைக்கின்றன என வாங்காமல், அந்த பொருள் நிச்சயம் நமக்குத் தேவையா என்று யோசித்த பின் வாங்குவது நல்லது. புத்திசாலித்தனமும் கூட’’ என்றார் மூர்த்தி.

தொகுப்பு : ப்ரியா



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல்
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...