கஜா புயல் நிவாரண நிதியாக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும்... மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கஜா புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. டெல்டா மாவட்ட மக்கள் இதில் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உணவு, உடை மற்றும் இருப்பிடமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த புயலால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அத்துடன் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் இறந்துள்ளன. கடலோர மாவட்டங்களில் விலங்குகள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் கஜா புயல் சீரமைப்பு, நிவாரண பணிகளுக்கு உதவிடும் வகையில் திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் ஒரு மாத சம்பளம் நிதி உதவியாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: