அமெரிக்க பத்திரிகையாளர் கசோகியை கொலை செய்தது யார்? நாளை அறிவிக்கிறார் அதிபர் டிரம்ப்: சிஐஏ.வின் முழு அறிக்கைக்கு காத்திருப்பு

வாஷிங்டன்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை பற்றி சிஐஏ அமைப்பின் முழு அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகலாம்’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் சவுதி அரேபியாவை சேர்ந்த செய்தியாளர் ஜமால் கசோகி பணியாற்றி வந்தார். இவர் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சனம் செய்து கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு தனது திருமணம் சம்பந்தமான ஆவணங்களை பெறுவதற்காக கடந்த அக்டோபர் 2ம் தேதி அவர் சென்றார். பிறகு, அவர் மாயமானார். அவர் சவுதி தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதாக துருக்கி அரசு தெரிவித்தது. இது தொடர்பான அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அமிலத்தில் கரைத்து பாதாள கழிவு நீர் பாதையில் வெளியேற்றப்பட்டதாகவும் துருக்கியில் இருந்து வெளியான செய்திகள் தெரிவித்தன. ஆனால், கசோகி மரணம் குறித்து சவுதி அரேபிய அரசு முரண்பட்ட விளக்கங்களை அளித்து வந்தது. பின்னர் தனது தூதரகத்துக்கள் கசோகி கொல்லப்பட்டதை சவுதி அரேபிய அரசு ஒப்புக்கொண்டது. இது சிலரின் நடவடிக்கையால் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவம் என கூறியது.

இது தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பு (சிஐஏ) விசாரணை மேற்கொண்டு வந்தது. சவுதி அரேபியாவில் இருந்து அரசு சார்பாக 15 பேர் அரசு விமானத்தில் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதும், அங்கு கசோகிக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்த அவர்கள், துண்டுத் துண்டாக வெட்டிக்கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதற்கான ஆடியோ ஆதாரத்தை துருக்கி விசாரணை அமைப்பு கொடுத்ததன் அடிப்படையில் சிஐஏ இந்த முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீயால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட வந்த அமெரிக்க அதிபர் டிரப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ‘‘பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது மிக கொடூரமான சம்பவம். இது நடந்திருக்கக் கூடாது. அவர் வேதனையில் துடிக்கும் ஆடியோ ஆதாரங்களை நான் கேட்க விரும்பவில்லை. இது குறித்து விசாரித்து வரும் அமெரிக்க உளவுத்துறை சிஐஏ இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. முழுமையான அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகலாம். அப்போது, அவரை கொன்றது யார் என்பதை தெரிவிப்பேன்’’ என்றார்.

காட்டுத் தீ சேதத்துக்கு நிர்வாக தவறே காரணம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தல் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது வேகமாக பரவியதில் 10 ஆயிரம் வீடுகள், 2,500 இதர கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதுவரை 76 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 1000 பேரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. காட்டுத் தீ சேதத்தை பாரடைஸ் பகுதியில் அதிபர் டிரம்ப் நேற்று பார்வையிட்டார். 

பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதைவிட மோசமாக முற்றிலும் கருகிய பகுதிகள் உள்ளதாக மீட்புப் படையினர் கூறுகின்றனர். கலிபோர்னியா நிர்வாகத்தின் தவறான நிர்வாகமே இந்த சோக சம்பவத்துக்கு காரணம். பருவநிலை மாற்றத்துக்கும், காட்டுத் தீக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: