தமிழகத்தில் நடக்கவுள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடுவது உறுதி: தமிழிசை பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடக்கவுள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடும் என தமிழிசை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பாஜ சார்பில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நேற்று நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில செயலாளர் கே.டி.ராகவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் புயல் தாக்கத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு, தீப்பெட்டி, கொசுவர்த்தி, கொசு வலை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை (இன்று) நாகப்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிட்டு, பாஜ சார்பில் நிவாரண பொருட்களை வழங்க உள்ளேன்.

தமிழக அரசு புயலின் வேகத்தை விட விரைவாக செயல்பட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும், 5 மாநில தேர்தலில் பாஜ அனைத்திலும் வெற்றி பெறும். பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் தமிழகம் மற்றும் குஜராத் மாநிலம் அதிகளவில் பயன்பெற்றுள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனைக்கு இந்த திட்டம் ஆதரவாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்த நரசிம்மராவ், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை நேருவின் குடும்பத்தினர் கேவலமாக நடத்தினர். பாஜவில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம். காங்கிரஸ் குடும்ப கட்சிதான். தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடும். இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி. தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: