×

வட மாநிலங்களில் உற்பத்தி துவக்கம் குடோன்களில் 500 கோடி வரை பெட்ஷீட் தேக்கம்: வியாபாரிகள் கவலை

ஈரோடு: வடமாநிலங்களில் பெட்ஷீட் உற்பத்தி துவங்கி விட்டதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெட்ஷீட் குடோன்களில் சுமார் ₹500 கோடி வரையிலான பெட்ஷீட் தேக்கம் அடைந்துள்ளதால் உற்பத்தியாளர்களும்,  வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் திருவேங்கடசாமி, ஈஸ்வரன் கோவில், என்எம்எஸ் காம்பவுண்ட், தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெட்ஷீட் குடோன்களும், மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெட்ஷீட்  குடோன் உள்ளன. இந்த குடோன்களுக்கு ஈரோடு மாவட்டம் சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், பழையகோட்டை, சேலம் மாவட்டம் எடப்பாடி, கரூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி மற்றும்  கைத்தறியால் பெட்ஷீட் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுஇருப்பு வைக்கப்படுகின்றன.

இதில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் ஆண்டுக்கு 7 மாதம் தொடர்ந்து பெட்ஷீட் உற்பத்தி செய்து, மீதமுள்ள 5 மாதங்களில் விற்பனை செய்வது வழக்கம். இதில் சென்னிமலை பெட்ஷீட்கள்(ஒன்று) ₹70 முதல்  ₹300 ரூபாய் வரையிலும், வெள்ளகோவில் பெட்ஷீட் ₹100 முதல் ₹200 வரையிலும், கரூர் மாவட்ட பெட்ஷீட் ₹100 முதல் ₹250 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெட்ஷீட் குடோன்களில், பெட்ஷீட் வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மத்திய பிரேதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம்,  டெல்லி, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக பெட்ஷீட்டுகளை வாங்கி செல்கின்றனர். இதில் வட மாநிலங்களில் பனிக்காலம் துவங்கி விட்டால் சுமார் 70 சதவீதம் பெட்ஷீட் ஈரோடு  மாவட்டத்தில் இருந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சூரத், டெல்லி, பஞ்சாப், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் பெட்ஷீட் உற்பத்திதுவக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பெட்ஷீட் சீசன்  துவங்கியும் வடமாநில வியாபாரிகள் சொற்ப அளவிலேயே வர துவங்கியுள்ளனர். இதனால்  குடோன்களில் சுமார் 500கோடி ரூபாய் வரை பெட்ஷீட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து ஈரோடு கணபதி பெட்சீட் குடோன் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், நூல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதில் கடந்த 3 மாதத்தில் 40 சதவீதம் வரை நூல் விலை உயர்ந்துள்ளது. இதன்காரணமாக  எங்களால் பெட்ஷீட்டுகளை உற்பத்தி விலைக்கு கொடுக்க முடியவில்லை. தமிழகத்திலும் பனிக்காலம் துவங்க உள்ளதால் பெட்ஷீட் விற்பனை இந்த மாதம் இறுதியில் இருந்து விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். சபரிமலை  சீசனில் பெட்ஷீட் விற்பனை வெறும் 5சதவீதமே விற்பனையாகும். ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநில வியாபாரிகள் வழக்கம்போல் பெட்ஷீட் கொள்முதல் செய்து வருகின்றனர். வடமாநிலங்களில் பனிக்காலம் துவங்கி  விட்டால் ஈரோடு பெட்ஷீட் குடோன்களில் இருந்து 70சதவீதம் பெட்ஷீட் விற்பனைக்கு வடமாநில வியாபாரிகள் வாங்கி செல்வர். ஆனால் இந்த ஆண்டு வடமாநிலங்களில் சில பகுதிகளில் பெட்ஷீட் உற்பத்தியை துவக்கி  விட்டனர்.

அங்கு பெட்ஷீட் தரம் குறைவானதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதால் ஏராளமான வியாபாரிகள் ஈரோட்டிற்கு பெட்ஷீட் கொள்முதல் செய்ய வரவில்லை. இருப்பினும் வடமாநிலங்களில் நம்ம ஊரு பெட்ஷீட்களுக்கு மவுசு  இருப்பதால் 15சதவீதம் வியாபாரிகள் வந்து பெட்ஷீட்டுகளை வாங்கி சென்றுள்ளனர். வடமாநில சீசனை நம்பி ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்டுகள் குடோன்களில் சுமார் ₹500 கோடி வரை  தேக்கமாகியுள்ளன என்றார்.

வட மாநிலங்களில் பனிக்காலம் துவங்கி  விட்டால் சுமார் 70 சதவீதம் பெட்ஷீட் ஈரோடு மாவட்டத்தில் இருந்து  விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சூரத், டெல்லி,  பஞ்சாப், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் பெட்ஷீட்  உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : states , Production,North States, kudos, Merchants worry
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து