×

காலணிகளை பதம் பார்த்த ஜிஎஸ்டி சீன இறக்குமதியால் கலங்கும் உற்பத்தியாளர்கள்

* இறக்குமதி வரியை அதிகரித்தும் பயனில்லை * சிறு, நடுத்தர தொழில்களும் பாதிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி அதிகரிப்பால் காலணி உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சிறு தொழில் துறையினர், குடிசை தொழிலாக ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் காலணி உற்பத்தி துறையில் மொத்தம் 900 கோடி டாலருக்கு (சுமார் ₹65,000 கோடி) வர்த்தகம் நடக்கிறது. இதில் பிளாஸ்டிக் மற்றும் தோலால் ஆன காலணிகள், ஷூ ஆகியவையும் அடங்கும். இந்த தொழிலில்  பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றின் மூலம் உற்பத்தியில் சுமார் 30 சதவீதம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதுதவிர, இந்திய சந்தை தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.ஆக்ரா - கான்பூர் உட்பட டெல்லி என்சிஆர் பகுதிகள், சென்னை - பெங்களூரு மற்றும் கொல்கத்தா பகுதியில் அதிகமாக காலணி உற்பத்தி நடக்கிறது. காலணி மற்றும் ஷூக்களுக்கான மேல்புற தோல், அடிப்பகுதி ஆகியவை  தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு அமைப்பு சாராத சிறு மற்றும் நடுத்தர தொழில் மட்டுமின்றி குடிசைத்தொழிலாகவும் மேற்கொண்டு இந்த நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றன. காலணி தயாரிப்பில் 80 சதவீத சப்ளை  இவர்களின் பங்களிப்பாகத்தான் உள்ளது.

ஜிஎஸ்டியில் 1,000 ரூபாய்க்கு கீழ் உள்ள காலணிகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய அளவில் இந்த தொழிலில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அமைப்பு சாரா தொழிலாளர்கள் தரப்பில்  இருந்து காலணி தயாரிப்புக்கான சப்ளை 70 சதவீதமாக குறைந்து விட்டது. அதேநேரத்தில், சீனாவில் இருந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. மலிவு விலையில் பொருட்களை குவித்து இந்திய பொருளாதாரத்துக்கு சீனா கேடு விளைவித்து வருகிறது. ஏற்கெனவே இந்தியாவில் டயர், ஸ்டீல் தொழில்கள்  சீனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து காலணிகளையும் மலிவு விலையில் இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.

சில காலணிகள், ஷூ வகைகள் முழுமையாக சீனாவிலேயே தயாரிக்கப்பட்டு இறக்குமதியாகின்றன. செயற்கை தோல்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளூரில் காலணி தயாரிப்பு மற்றும் மூலப்பொருட்கள் சப்ளையில்  ஈடுபட்டுள்ள சிலர் கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்து, இந்திய தயாரிப்பு என்ற பெயரில் சப்ளை செய்ய தொடங்கி விட்டனர்.  இதனால் உள்நாட்டு தொழில் பாதிப்பு அடைந்து வருகிறது. சீன மலிவு ஷூ, காலணி  இறக்குமதியை தடுக்க மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியது. இருந்தபோதும், சீனாவில் இருந்து இறக்குமதி குறைந்தபாடில்லை. இது காலணி உற்பத்தி துறையில் வேலை இழப்புக்கும், நலிவுக்கும் காரணம் ஆகிவிட்டது  என்கின்றனர் தொழில் துறையினர்.

வேலைக்கு ஆளில்லை முதலீடுக்கும் வழியில்லை
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய் மத்திய அரசு அழைப்பு விடுத்து வருகிறது. இதுபோல், உள்நாட்டு தொழில் துறையினரையும் உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவித்து  வருகிறது. ஆனால் இது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. இறக்குமதி அதிகரிப்பால் காலணி உற்பத்தியில் வியட்நாம், வங்க தேசம், சீனாவை விட உள்நாட்டு உற்பத்தி குறைந்து விட்டது. அதோடு, திறமையான  ஊழியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. கடந்த 3 ஆண்டில் தொழிலாளர் கூலி 30 சதவீதம் அதிகரித்து விட்டது. இதை நம்பி முதலீடும் செய்ய தயக்கமாக உள்ளது என காலணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிலர் தெரிவித்தனர்.

இந்திய தயாரிப்பாக மாறி அமெரிக்கா செல்லும் சீன காலணிகள்
இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு காலணிகள் ஏற்றுமதியாகின்றன. இவற்றை அனுப்பும் பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்பவர்களே சீனாவில் இருந்து இறக்குமதி செய்து இந்திய பிராண்ட் பெயரில்  சப்ளை செய்கின்றனர். சீன தயாரிப்புகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இருப்பினும், சீன தயாரிப்பு இந்திய தயாரிப்பாக மாறி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் இந்திய உற்பத்திக்கு  பாதிப்பு ஏற்படுத்தி, அமெரிக்க இறக்குமதி தடையை பொய்யாக்கி விட்டது சீனா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gesture, Manufacturers , China imports
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில்...