பெங்களூரு சென்ற போது கள்ளச்சாவி மூலம் கைவரிசை சசிகலா உறவினர் இளவரசி வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளை

* தப்பி ஓடிய வடமாநில செக்யூரிட்டியை பிடிக்க 2 தனிப்படை

* 8 நாள் கழித்து புகார் அளித்ததால் போலீசார் ரகசிய விசாரணை

சென்னை: சசிகலா உறவினர் இளவரசி வீட்டில் கள்ளச்சாவி மூலம் பல லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தலைமறைவான வடமாநில செக்யூரிட்டியை பிடிக்க 2 தனிப்படைகள்  அமைக்கப்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறையில் உள்ளனர். இதில் இளவரசி மட்டும் இந்த மாதம்  முதல் வாரத்தில்  பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.பின்னர் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் ராமநாதன் தெருவில் உள்ள தனது வீட்டில் இளவரசி தங்கினார். அதை தொடர்ந்து இளவரசி பரோல் முடிந்து கடந்த 8ம் தேதி காலை 9.30 மணிக்கு மீண்டும் பெங்களூரு சிறைக்கு  புறப்பட்டு சென்றார். அப்போது இளவரசியை பெங்களூரு சிறையில் விட அவரது மகன் விவேக் மற்றும் அவரது உறவினர்கள் உடன் சென்றனர்.

விவேக் கார் ஓட்டுனரான அம்பத்தூரை சேர்ந்த முரளி(38) மட்டும் கடந்த 8ம் தேதி இரவு 11.30 மணிக்கு இளவரசி வீட்டிற்கு வந்து வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி உள்ளார். மறுநாள் காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது,  வீட்டு முதல் மாடியின் கதவு திறந்து கிடந்தது. உடனே ஓட்டுனர் முரளி உள்ளே ெசன்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்தது அதிர்ச்சியடைந்தார்.அதைதொடர்ந்து ஓட்டுனர் முரளி சம்பவம் குறித்து விவேக் நிறுவனத்தின் மேலாளர் பிரசன்னாவுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். பிறகு பிரசன்னா கொள்ளை சம்பவம் குறித்து விவேக்கிற்கு தகவல் கொடுத்துவிட்டு  சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்தார். பின்னர் இளவரசியின் உறவினர்களும் வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொள்ளை தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை நடத்திய இளவரசி குடும்பத்தினர் கடந்த 2  நாட்களுக்கு முன்புதான் ேபாலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஓட்டுனர் முரளி மற்றும் விவேக் மேலாளர் பிரசன்னா ஆகியோர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ேநற்று முன்தினம் இரவு பரபரப்பு புகார்  ஒன்று அளித்தனர். அதில், வீட்டின் பீரோவில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 750 கிராம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால்,  இளவரசி வீட்டில் கிலோ  கணக்கில் நகைகள் மற்றும் பணம் மாயமானதாக கூறப்படுகிறது. புகாரின் படி போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இளவரசி பரோல் முடிந்து பெங்களூரு செல்லும்போது விவேக் மனைவி வீட்டில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு  அண்ணா நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ெசன்றுள்ளார். அப்போது வீட்டில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த செக்யூரிட்டி கோனாக் (26) மட்டும் பணியில் இருந்தது தெரியவந்தது.அதன் பிறகு செக்யூரிட்டி கள்ளச்சாவி மூலம் வீட்டை திறந்து கொள்ளையடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏன் என்றால் கொள்ளை சம்பவம் நடந்ததில் இருந்து கோனாக் செக்யூரிட்டி பணிக்கு வராமல்  தலைமறைவானதும் தெரியவந்தது. மாயமான செக்யூரிட்டி கோனாக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். எனவே தலைமறைவான செக்யூரிட்டி கோனாக் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து  கொண்டு தலைமறைவாகி இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது செல்போன் எண்ணை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மகாலிங்கபுரம் ராமநாதன்  தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இளவரசி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது கடந்த 8ம் தேதி நள்ளிரவு, ஆனால் காவல் நிலையத்தில் 8 நாட்கள் கழித்து 17ம் தேதி இரவு 10 மணிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கொள்ளை பெரிய  அளவில் நடந்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்பது குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி  உள்ளது.  எப்போதும் ஆட்கள் நிறைந்து காணப்படும் இளவரசி வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நுங்கம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: