`கஜா’ புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாகை, வேதாரண்யத்துக்கு கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள்: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: கஜா’ புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிக்கு மீட்பு பணிகளை விரைவுபடுத்த கூடுதல் ஐஏஎஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். சென்னை, எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை துறையின் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ, பேரிடர் மேலாண்மை துறை இணை ஆணையர் லட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் வெங்கடாசலம் ஆகியோர் நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் நேற்று காலை புயல் கரையை கடக்கும்  வரை 24 மணி நேரம் தங்கி இருந்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து  கிடைக்கும் தகவல்களை மாவட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். புயல் கரையை கடந்ததை தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:

`கஜா’ புயல் நேற்று அதிகாலை முழுமையாக நாகப்பட்டினத்தில் கரையை கடந்து, மேற்கு தொடர்ச்சி மலை வழியாக திண்டுக்கல் அரபிக்கடலுக்கு வலுவிழக்கும் நிலையில் தேனி, திண்டுக்கல் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்திருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் அரசு ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது. புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்துக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் விக்ரம்கபூர், ராதாகிருஷ்ணன் அனுப்பப்பட்டுள்ளனர். வேதாரண்யம் பகுதிக்கு கூடுதலாக மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகளுக்கு பாராட்டு

`கஜா’ புயலை எதிர்கொள்வதில் மாநில பேரிடர் மேலாண்மை மையம் சவாலான பணியை  எடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தோம். அதன்படி, வருவாய்  நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறையின் முதன்மை செயலாளர்  அதுல்யமிஸ்ரா மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் அர்ப்பணிப்புடன் பணிகளை  மேற்கொண்டனர். இதன்மூலம், எண்ணிலடங்கா உயிர்களை பாதுகாத்து, தமிழக மக்களின்  பாராட்டை பெற்றுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் உதயகுமார் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: