3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எம்ஜிஆர் பல்கலைக்கழக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை: லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2011ம் ஆண்டு யாசின் ஷெரிப் என்பவர் பிசியோதெரபி படித்து முடித்துவிட்டு பயிற்சி (இன்டெர்ன்ஷிப்) செய்வதற்காக காத்திருந்தார். அந்த சமயத்தில், சில காரணங்களுக்காக அவர் படித்த கல்லூரி மூடப்பட்டது. இந்நிலையில் வேறொரு கல்லூரியில் பயிற்சி மேற்கொள்ள இடம் ஒதுக்கக்கோரி  சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளார்.இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க பல்கலைக்கழக பிரிவு அதிகாரியான பார்த்தசாரதி என்பவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் யாசின் ஷெரிப் இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். போலீசார் அறிவுரையின்படி யாசின் ஷெரிப் லஞ்ச பணத்தை பார்த்த சாரதியிடம் கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்து இருந்த போலீசார் பார்த்தசாரதியை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெர்மிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அரசு வழக்கறிஞர் பூர்ணிமாதேவி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பார்த்தசாரதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து, அவரிடம் கைப்பற்றப்பட்ட ரூ.6 ஆயிரத்தை அரசுடமையாக்கவும் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: