2 நாட்களுக்கு மழை பெய்யும் ‘கஜா’ புயல் நாளை அரபிக்கடல் பகுதிக்கு செல்லும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த புயல் நாளை அரபிக் கடல் பகுதிக்கு செல்லும்.  புயல் கடந்து செல்லும் வரை உள் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   கடந்த 10ம் தேதி வங்கக் கடலில் உருவான கஜா புயல் மெல்ல நகர்ந்து நேற்று முன்தினம் மாலை நாகப்பட்டினம் கோடியக்கரை பகுதியை தொட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. நேற்று காலை 7.15 மணிக்குத்தான் புயலின் கடைசிப் பகுதி தமிழகத்தின் உள் நுழைந்தது. அதனால் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

நாகப்பட்டினம், வேதாரண்யம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புயலின் சூறைக்காற்று பெரும் கோரத்தாண்டவம் ஆடியது.  குறிப்பாக நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளில் மட்டும் மணிக்கு 110 கிமீ வேகம் முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் மேற்கண்ட பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்நிலையில், கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டம் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்தபடி  இருந்தது. இதுபோன்ற நிகழ்வு அரிதாகத்தான் நடக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதிராமபட்டினத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் 2.30 மணி அளவில் மணிக்கு 111 கிமீ வேகத்திலும், நாகையில் மணிக்கு 100 கிமீ வேகத்திலும், காரைக்காலில் 92 கிமீ வேகத்திலும் காற்று வீசியது. சென்னையை தாக்கிய வர்தா புயலின் போது மீனம்பாக்கத்தில் மணிக்கு 122 கிமீ வேகத்திலும், நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 114 கிமீ வேகத்திலும் தாக்கியதற்கு இணையாக,  நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு கஜா புயலும் தாக்கியது.

இதுதவிர நேற்று புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சியின் தென்பகுதி, கரூர், திண்டுக்கல், மதுரையின் வட பகுதி ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் புயலின் தாக்கம் ஏற்படுவது அரிதான ஒன்று என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். கஜா புயல் சற்று வலுக்குறைந்த நிலையில் இன்று கேரளாவில் நுழையும். இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்யும். எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய பகுதிகளில் நல்ல மழை இருக்கும். கஜா நகர்ந்து செல்லும் பாதைகளில் எல்லாம் கனமழை பெய்யும். பின்னர் இந்த புயல் இன்று இரவு அல்லது  நாளை காலை அரபிக் கடலுக்குள் செல்லும்.

கஜா புயல் கரை கடப்பதற்கு முன்னதாக, நேற்று முன்தினம் மாலையில் சென்னையில் சில இடங்களில் மட்டும் திடீர் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. இதனால் சென்னைவாசிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், புயல் கரையை கடந்த நேரத்தில் செங்கல்பட்டு 107 மிமீ, திருப்போருர் 85, உத்திரமேரூர் 73, காஞ்சிபுரம் 59, கேளம்பாக்கம் 47, திருவள்ளூர் 42, காட்டுப்பாக்கம் 27, மாமல்லபுரம் 24,  சோழவரம் 19, தாமரைப்பாக்கம் 16, பொன்னேரி 13, செங்குன்றம் 12, திருத்தணி 12, தாம்பரம், மாதவரம் 10 மிமீ என மழை பெய்துள்ளது. கஜா புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று, திருத்துறைப் பூண்டியில் 170 மிமீ மழை பெய்துள்ளது. அதிராம்பட்டினம் 160மிமீ, பேராவூரணி, பட்டுக்கோட்டை, நெய்வேலி 140மிமீ, விருதாசலம் 120 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டு நாட்்களுக்கு மழை பெய்யும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: