புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில், ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தலைவர்கள் வலிறுயுத்தி உள்ளனர்.  பாமக நிறுவனர் ராமதாஸ்: கஜா புயலால் எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் சேதங்களை சீரமைத்து இயல்பு நிலையை மீட்க வேண்டியது அவசர தேவையாகும். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சமூக அக்கறை கொண்ட இளைஞர்களும் ஈடுபட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் புயல் சேத நிவாரணப் பணிகளுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: கஜா புயலால் பெரும் சேதம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி மற்றும் போதுமான மனித சக்திகளை பயன்படுத்தி விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இழப்புகளை மதிப்பிட உடனடியாக மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பி, சேதத்தை மதிப்பிட்டு நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழக அரசும் குழுக்களை அமைத்து, மதிப்பிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், காங்கிரஸ் நிர்வாகிகளும், தோழர்களும் தங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிட்டிடும் வகையில் இயன்ற உதவிகளையும், பணிகளையும் ஆங்காங்கே மேற்கொள்ள வேண்டும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ‘கஜா’ புயலால் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதிக  அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 10 கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான இருப்பிடத்தை உறுதி  செய்துகொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.

மீட்புப்பணிகள்,  பாதுகாப்புப்பணிகள் ஆகியவற்றில் இன்னும் அதிக அளவில் கூடுதலான கவனம்  செலுத்தி வேகப்படுத்திட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: கன மழையுடன் பலத்த புயல் காற்று வீசியதால் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளில் வசிக்க முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்யவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், அரசு அலுவலர்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழகத்தில் கஜா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரிடர்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவது மிக அவசியமாகும். அரசுடன் கைகோர்த்து தனியாரும் தாராள உதவிகளை மேற்கொள்ள வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பழைய நிலைமைக்கு மீட்டெடுக்க அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்: புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில்  மக்கள் குடிநீர்,  உணவு, உடை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே டெங்கு, பன்றி காய்ச்சல்களினால் மக்கள் அவதிப்படும் நேரத்தில்,  இப்புயலினால் மேலும் தொற்றுநோய் வராமல் இருக்க ேபார்க்கால  அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க  வேண்டும். மின்சாரம், தொலைதொடர்பு, குடிநீர், உணவு, உடைகள் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: