மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமான சேவை ரத்து: தென் மாவட்ட பயணிகள் அவதி

சென்னை: ‘கஜா’ புயல் மற்றும் கன மழை காரணமாக, சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து  நேற்று காலை 6.05 மணியளவில் தூத்துக்குடி செல்லும் விமானம் தயார் நிலையில் இருந்தது. அதில் பயணம் செய்ய 60 பேர் வந்திருந்தனர். ஆனால், மோசமான வானிலை நிலவியதால் விமானம் மிகவும் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு தூத்துக்குடி புறப்பட்டது. இதேபோல், நேற்று காலை 6.50 மணிக்கு திருச்சி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல 47 பேர் வந்திருந்தனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டது.

நேற்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தனியார் விமானம் 58 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் திருச்சியில் தரை இறங்கமுடியாமல், காலை 8.30 மணிக்கு மீண்டும் சென்னை  திரும்பியது. மீண்டும் விமானம் நேற்று பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மேலும், நேற்று காலை 9.50 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய தனியார் விமானம், காலை 9.40 மணிக்கு திருச்சி செல்லவேண்டிய தனியார் விமானம், காலை 10.25 மணிக்கு தூத்துக்குடி செல்லும் தனியார் விமானம், பகல் 12.50 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் உரிய நேரத்தில் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதுபோல, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்ல நேற்று பகல் 11.30 மணியளவில் ஏர் இண்டியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த விமானம் தாமதமாக செல்லும் என்று அறிவித்ததால் அந்த பயணத்தை ரத்து செய்து விட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு தனியார் விமானத்தில் அவர் மதுரை சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: