கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா: சோனியா காந்தி, தலைவர்கள் பங்கேற்பு: சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிச.16ல் நடக்கிறது

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ம் தேதி நடக்கிறது. இதில் சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, சரத்பவார், சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா ேபான்ற தேசிய தலைவர்கள் மற்றும் தமிழக தலைவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.  திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். கருணாநிதிக்கு முழு உருவச் சிலை அமைத்து அண்ணா அறிவாலய வளாகத்தில் நிறுவப்படும் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து சென்னையை அடுத்த மீஞ்சூரில் கருணாநிதியின் முழு உருவச் சிலை தயாரானது. 8 அடி உயரம் கொண்ட கருணாநிதியின் முழு உருவச்சிலை முழுவதும் வெண்கலத்தால் தயாரானது. இதன் எடை 500 கிலோ. தற்போது சிலைக்கான பீடம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தின் முன்புறம் கருணாநிதி சிலையை நிறுவ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வருகிற டிசம்பர் 16ம் தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விழாவில், அகில இந்திய தலைவர்கள் மற்றும் தமிழக கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும், விழாவில் தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக ஒய்எம்சிஏ திடலில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழா அழைப்பிதழ்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வழங்குவார் என்று தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: