1,137 கோடி மோசடி வழக்கு டிஸ்க் நிறுவன நிர்வாகிகளிடம் காவலில் 7 நாட்கள் விசாரணை

சென்னை: நிலம் வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.1,137 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக மதுரையை சேர்ந்த டிஸ்க் அசர்ட் லீட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளை போலீஸ் காவலில் 7 நாட்கள் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கித் தருவதாக மதுரையிலிருந்து செயல்பட்டு வந்த டிஸ்க் அசர்ட் லீட் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.1,137 கோடி வசூல் செய்தது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜனார்த்தனன், உமா மகேஸ்வரன், அருண் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை நிதி மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து, முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்காக ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையில் குழு ஒரு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், டிஸ்க் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் ஜனார்த்தனன், உமா மகேஸ்வரன், அருண் ஆகியோர் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த இயக்குநர்களுக்கு எதிராக நீதிபதிகள் பிடிவாரன்ட் பிறப்பித்தனர்.

அதன்படி, 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்காததால் 3 பேருக்கும் ஏற்கனவே வழங்கிய முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது உத்தரவிட்டனர்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஸ்க் அசர்ட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்து ஜனார்த்தனன் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மதுரை சிறையில் உள்ள ஜனார்த்தனன் உள்ளிட்ட 3 பேரை, வரும் 19ம் தேதி முதல் 7 நாட்கள், காலை 10.30 முதல் 5.30 மணி வரையில் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: