மாநில தேர்தல் களம்

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சட்டீஸ்கரில் முதல் கட்டத் தேர்தல் முடிந்துள்ளது. மற்ற மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தல் களத்தில் சுவாரஸ்ய விஷயங்களுக்கு பஞ்சமில்லை. அவற்றில் சில...

டிஆர்எஸ் தான் டாப்:

ஐதராபாத்: பிராந்திய கட்சிகளில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சிக்குதான் 2017-18 நிதியாண்டில் நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகளவில் நன்கொடையை அள்ளித் தந்துள்ளனர். அது எவ்வளவு தெரியுமா? ₹19.4 கோடி. 2018, அக்டோபரில் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். தேசிய கட்சிகளில் காங்கிரஸ் முதலிடம் வகிக்கிறது. அந்த கட்சி பெற்ற நன்கொடை ₹26 கோடி. மத்தியில் ஆளும் பாஜ இன்னும் தனது நன்கொடை விவரத்தை தெரிவிக்கவில்லை. பிராந்திய கட்சிகளில் டிஆர்எஸ்.சுக்கு பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை குவித்துள்ளதால், செல்வாக்குமிக்க கட்சியாக அது திகழ்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு ₹8.3 கோடியும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு ₹1.7 கோடியும் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

பீதியில் அலறும் திருநங்கை:

இந்தூர்: மத்தியப் பிரதேச தேர்தலில் போட்டியிடும் ஒரே திருநங்கையான பால வைஸ்வரா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு தர வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளார். வேட்பு மனு தாக்கல் முடிந்தவுடன் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். ‘இந்தூரில் வலுவான பாஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களை எதிர்த்து நான் போட்டியிடுவதால் என் உயிருக்கு மிரட்டல் வந்துள்ளது. உள்ளூர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள், வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு மிரட்டினர்.  ஆனால், நான் போட்டியிடுவது உறுதி. இருந்த போதிலும், அரசியல்வாதிகளால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, எனவே, 24 மணி நேரமும் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று அவர் கேட்டுள்ளார். இது, இந்தூர் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனீக்கள் கொட்டினால்...

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஜலோர் மாவட்டம், பால்னி வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட்ட தேர்தல் அலுவலர்கள், அந்த மையத்திற்கு பக்கத்தில் உள்ள வீட்டில் ஒரு பேரிய தேன்கூடு இருப்பதை பார்த்தனர். வாக்குப்பதிவு நாளில் யாராவது தேன்கூட்டை கலைத்து விட்டால் தேனீக்கள் வாக்காளர்களை பதம் பார்த்தும்விடும் என்ற அச்சம் ஏற்பட்டது. உடனே அந்த வீட்டின் உரிமையாளருக்கு, ‘வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக வீட்டில் உள்ள தேன்கூட்டை உங்கள் செலவில் அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால், வாக்காளரை தேனீக்கள் கொட்டி வாக்குப்பதிவு தடைப்பட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்து நோட்டீஸ் அனுப்பினர். அதை பார்த்த வீட்டின் உரிமையாளர் மலராம் மாலி, தேனீ கொட்டியது போல் அதிர்ச்சி அடைந்துள்ளார். ‘என்னால் தேன்கூட்டை அப்புறப்படுத்த முடியாது. தேவைப்பட்டால் நீங்களே செலவு செய்து அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கைவிரித்துவிட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தேர்தல் நாளில்தான் தெரியும்.

ஒட்டகம், குதிரைகளில் பவனி:

ஜெய்ப்பூர்: தேர்தல் என்றால் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சின்னத்தை பிரபலப்படுத்தவும், வாக்காளரை கவரவும் வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். அப்படித்தான், ராஜஸ்தான் தேர்தலிலும் வேட்பாளர்கள் யானை, குதிரை, ஒட்டகங்களில் பேரணியாக வந்து மனு தாக்கல் செய்தனர். இதனால், ஜெய்ப்பூர் கலெக்டர் அலுவலக வளாகமே கலகலத்து போயுள்ளது. அம்பர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நவின் பிலானியா, தனது கட்சி சின்னமான யானை மீது அமர்ந்து பேரணியாக வந்து மனு தாக்கல் செய்தார். அதேபோல், ஜோத்வாரா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் சுகல் கிஷோர் சர்மா, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஒட்டக  வண்டியில் பேரணியாக வந்து கலக்கினார். பாரதிய ஜன் கிராந்த் தள் வேட்பாளர் சங்கர் லால் குமவாத் குதிரையில் வந்து மனு தாக்கல் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: