மண்டல பூஜைக்காக பலத்த பாதுகாப்புடன் சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக கேரளா முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இளம் பெண்களை அனுமதிக்க மேற்கொண்டு வரும் மாநில அரசின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் சபரிமலை மண்டலகால பூஜைகளுக்காக நேற்று மாலை 4.55 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்தார். பின்னர் புதிய ேமல்சாந்திகள் பொறுப்பு ஏற்கும் சடங்கு நடந்தது. சபரிமலை மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரியும் மாளிகைப்புறம் மேல்சாந்தியாக நாராயணன் நம்பூதிரியும் பொறுப்பு ஏற்றனர். இவர்களுக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் மூல மந்திரம் சொல்லிக்கொடுத்தார். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இன்று காலை 4 மணிக்கு புதிய மேல்சந்தி கோயில் நடையை திறந்து பூஜை நடத்துவார். டிசம்பர் 27ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

இந்த மண்டல காலத்தில் ஐயப்பனை தரிசிக்க இதுவரை சுமார் 1000 இளம் பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இளம் பெண்கள் வந்தால் சபரிமலையில் வன்முறை ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஏடிஜிபிக்கள், 3 ஐஜிக்கள் தலைமையில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கமாண்டோ வீரர்கள், மத்திய அதிவேக அதிரடிப்படை போலீசார், பெண் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் 7 நாட்களுக்கு சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  தரிசனம் முடிந்த உடன் திரும்பிவிட வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

சபரிமலையில் அதிகாலை 4 முதல் பகல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். சபரிமலை வரும் பக்தர்கள் ெநய் அபிஷேகம் செய்யாமல் திரும்புவதில்லை. நெய் அபிஷேகம் செய்யும் நேரம் முடிந்தால் சன்னிதானத்தில் தங்கி மறுநாள் நெய் அபிஷேகம் செய்த பின்னரே பக்தர்கள் திரும்புவார்கள். போலீசாரின் நடவடிக்கையால்  நெய் அபிஷேகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோயில் நடை சார்த்தப்பட்ட உடன் இரவு 11 மணிக்குள் கடை, ஓட்டல்களை மூடவேண்டும். அப்பம் அரவணை கவுண்டர்களை 10 மணிக்கு மூடவேண்டும். சன்னிதானத்தில் உள்ள அன்னதான மண்டபத்தை  11 மணிக்கு மேல் திறக்கக்கூடாது என்றும் போலீசார் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

சன்னிதானத்தில் பத்திரிகையாளர்களுக்கு அறை ஒதுக்க தடை விதித்து சன்னிதானம் ஐஜி விஜய் சாக்கரே உத்தரவிட்டுள்ளார்.  ேபாலீசாரின் கெடுபிடிக்கு தேவசம் தலைவர் பத்மகுமாரும் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீசாரின் நடவடிக்கையால் தேவசம்போர்டுக்கு வருமான இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து புகார் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களை தடுக்கக்கூடாது:

சபரிமலையில் பத்திரிகையாளர்களுக்கு போலீசார் விதித்துள்ள நிபந்தனைளை நீக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. சபரிமலையில் உண்மையான பக்தர்களையும் பத்திரிகையாளர்களையும் தடுக்கக்கூடாது.  வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்கும்போது எதற்காக பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். இது தொடர்பாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவகாசம் கோரி இன்று மனு தாக்கல்:

தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் பம்பையில் கூறியதாவது: சபரிமலையில் ஆச்சாரங்களை கடைபிடிப்பதில் இருந்து தேசவம்போர்டு பின்வாங்காது. இளம் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கால அவகாசம் கேட்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை (இன்று) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். மூத்த வழக்கறிஞர் தேவசம்போர்டு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராவார்.  சபரிமலையில் 24 மணிநேரமும் கடை, ஓட்டல்கள் திறக்கலாம். மற்ற கட்டுப்பாடுகள் குறித்து நாளை (இன்று) முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பி சென்றார் திருப்தி தேசாய்:

சபரிமலை செல்வதற்காக பெண்ணியவாதியும், ‘பூமாதா பிரகெட்’ அமைப்பின் தலைவருமான திருப்தி தேசாய், மும்பையில் இருந்து நேற்று காலை கொச்சி விமான நிலையம் வந்தார். அவருடன் மேலும் 7 இளம் பெண்களும் வந்தனர். ஆனால், அவர்கள் 16 மணி நேரத்திற்கு மேல் கொச்சி விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்டனர்.. திருப்தி தேசாயை வெளியே வரவிடாமல் பக்தர்கள் முற்றுகையிட்டனர். போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்தும் அவரால் வெளியே வர முடியவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை கடுமையாக ஏற்பட வாய்ப்பு இருப்பதால், திரும்பி செல்லும்படி அவரிடம் போலீசாரும் வேண்டுகோள் விடுத்தனர். இதனால், வேறுவழியின்றி இரவு 9.30 மணிக்கு மும்பை திரும்பினார். இரு்ப்பினும், ‘‘மீண்டும் திரும்பி வருவேன்’’ என கூறி விட்டு சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: