இடைத்தேர்தல் வருவதால் வருகிறீர்களா? வெள்ளம் பாதித்த பகுதிக்கு சென்ற துணை முதல்வரை மக்கள் முற்றுகை: பாதியிலேயே திரும்பியதால் பரபரப்பு

பெரியகுளம்: பெரியகுளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே திரும்பி சென்றார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கஜா புயல் காரணமாக பட்டாளம்மன் கோயில் தெரு, பங்களாபட்டி குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். வராகநதியில் வெள்ளத்தை பார்வையிட்ட அவர், பின்பு பட்டாளம்மன் கோயில் தெருவுக்குள் சென்று பார்வையிட தொடங்கினார். அப்போது அப்பகுதி மக்கள், அவரை முற்றுகையிட்டு, ‘‘எங்கள் பகுதிக்கு வரக்கூடாது’’ என தெரிவித்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து துணை முதல்வரை நெருங்கவிடாமல் தடுத்தனர்.

அதையும் மீறி அவர்கள் ஓ.பன்னீர்ெசல்வத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. `` ஓட்டு  வாங்கும்போது வந்த நீங்கள், இதுவரை எங்களது பகுதியில் என்ன நடக்கிறது என்று கூட பார்க்கவில்லை. தற்போது மீண்டும் இடைத்தேர்தல் வருவதால் வந்துள்ளீர்களா? வெள்ளம் பாதித்த எங்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை, தேர்தல் அடையாள அட்டை ஆகியவற்றை வீசி எறிந்து விடுவோம்’’ என்றனர். இதனால் அதிர்ச்சியான ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே திரும்பி சென்றார். சொந்த ஊரிலேயே துணை முதல்வருக்கு நேர்ந்த  இந்த சம்பவத்தால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். தேனி கலெக்டர்  பல்லவி பல்தேவ், எஸ்பி பாஸ்கரன் உட்பட அரசு அதிகாரிகள்  உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: