வேதாரண்யத்தை சுழற்றி அடித்த புயல் 1000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

நாகை: கஜா புயல் நாகை-வேதாரண்யத்தின் கோடியக்கரை கரை பகுதியை நள்ளிரவு 12.01 மணிக்கு கடந்தது. முதலில் வடக்கில் இருந்து தெற்கே வீசிய பலத்த காற்று 60-70கிமீ வேகத்தில் வீசி கடந்தது. பின்னர் மீண்டும் திரும்பி 110 கி.மீ வேகத்தில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வீசியது. இந்த சுழற்சி புயல் காற்றினால் கோடியக்கரை முதல் வேதாரண்யம் வரையிலான மீனவ கிராமங்களான வேட்டைக்காரன்புதூர், தலைஞாயிறு, வானவன்மகாதேவி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு ஆகியவை பலத்த சேதமடைந்தது. வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரைக்கு 10 கிமீ கடலோர பகுதியில் மீனவ கிராமங்களில் இருந்த 1000க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் கூரைகள் பறந்தது. மழை பெய்ததால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது.

ஆறுகாட்டுதுறை, கோடியக்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் சேதமானது. இதில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைபடகு ஒன்றை புயல் காற்று 200 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசியது. வேதாரண்யத்தில் முகாமிட்டிருந்த பேரிடர் மீட்பு குழுவினர் வேதாரண்யம்-பட்டுக்கோட்டை, வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம்-நாகை சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர். 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததை அடுத்து இதனை சீர்ப்படுத்தும் பணி 5 நாட்களாகும் என்பதால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

கஜா புயல் பாதிப்பால் வேதாரண்யத்தில் வர்த்தகத்தில் முக்கிய தொழிலான ஏற்றுமதி மீன்கள், உப்பளங்கள், மாங்காய், சவுக்கு, மல்லிகை, தென்னை என 1000 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயத்தில் இருந்த புள்ளிமான்கள், நரி, காட்டுப்பன்றி, குதிரை, மயில்கள் ஆகியவை இறந்து கடற்கரையோரம் கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் மாயமாயின. முன்னதாக கடந்த வாரம் அளவிற்கு அதிகமாக 20 செமீ மழை பெய்ததால் காடுகளில் நீர் நிரம்பி, குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியும் நின்றது. தற்போது புயல் ஏற்படுத்திய மழை 15 செமீ பதிவாகி உள்ளது பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: