கஜா புயல் வெளுத்து வாங்கிய நேரத்தில் : சென்னையில் சுட்டெரித்தது வெயில்

* வடகிழக்கு பருவமழை தொடங்கியும் மழை பொழியாத சோகம்

* ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு குறைவதால் குடிநீருக்கு திண்டாடும் நிலை

* புதிய காற்றழுத்தமாவது கரிசனம் காட்டுமா என அதிகாரிகள் காத்திருப்பு

சென்னை: நாகை, புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிபோட்ட நேரத்தில் சிறிது அளவுக்கு கூட மழை பெய்யாமல் சென்னையில் வெயில் சுட்டெரித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கியும் மழை பொழியாததால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகியவை உள்ளன. இந்த 4 ஏரிகளை நம்பிதான் சென்னை மக்களின் குடிநீர் தேவையை அதிகாரிகள் பூர்த்தி செய்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி  சாலையில் வீணாக ஓடியது.

குறிப்பாக, எந்தவித முன்னறிவிப்புமும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்தவிடப்பட்ட தண்ணீரால் தலைநகர் சென்னையே தண்ணீரில் தத்தளித்தது. இதற்கு முக்கிய காரணம் நீர்நிலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தூர்வாரி பராமரிக்காததுதான். இதன்பிறகு, 2016ம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை வர்தா புயல் புரட்டி போட்டது. இதில், 3 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. 2015ம் ஆண்டு பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சொல்ல கூடிய அளவுக்கு மிகப்பெரிய மழை எதுவும் பெய்யவில்லை. பெய்த சிறிது அளவு மழையும் கூட சுட்டெரிக்கும் வெயிலினால் ஆவியாக செல்கிறது. ஏரிகளை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் ஆங்காங்கே மண் திட்டுகள் உள்ளன. இதனால், தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ஆந்திரா மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் அம்மாநில அரசு முறையாக வழங்காததால், சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் குறைந்த அளவு தண்ணீரையும் அம்மாநில விவசாயிகள் எல்லையில் மின் மோட்டார் மூலம் உறஞ்சி எடுத்து விடுகின்றனர். இதனால், ஆந்திர அரசு திறந்துவிடும் தண்ணீரில் சிறிது அளவே பூண்டி ஏரிக்கு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்யாததால் மழையை நம்பி இருந்த அதிகாரிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. மழை காலத்திலும் கோடை போன்று வெயில் கொளுத்தியதால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சோகத்தில் மூழ்கினர். இதையடுத்து, வடகிழக்கு பருவமழையாவது கரிசனம் காட்டாதா என நம்பி அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், வடகிழக்கு பருவமழையும் இந்தாண்டு தாமதமாக இந்த மாதம் துவக்கித்தில்தான் தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலேயே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது அடுத்தடுத்த நாட்களில் புயல் சின்னமாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரியிடப்பட்டது.

இந்த புயல் சென்னை வழியாக கரையை கடக்கும் என கூறப்பட்டது. இதனால், மீண்டும் வர்தா போன்று ஒரு புயல் சென்னையை உருக்குலைக்கும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. சில நாட்களில் கஜா புயல் திசை மாறி நாகை-பாம்பன் இடையே கரையை கடக்கும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், புயல் கடக்கும் அன்றும், மறுநாளும் சென்னையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில், நாகை - வேதாரண்யம் இடையே நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கஜா புயல் கரையை கடந்தது. இதனால், பலத்த மழையும், 110 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி காற்றி வீசியதால் நாகை, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் முற்றிலும் நிலைகுலைந்துள்ளன. பல்லாயிரம் மரங்களும், பயிர்களும் நாசமாகின. 19 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்தன. திருவாரூர், தஞ்சை, புதுகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுகை, நாகை திருச்சியில் புயலுக்கு 51 பேர் பலியாகியுள்ளனர். இவ்வளவு உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டும் சென்னையில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. மாறாக வெயில்தான் சுட்டெரித்தது. இதனால், சென்னை மக்களும் அதிகாரிகளும் சோகத்தில் உள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர் இருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்க முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

4 ஏரிகளிலும் தண்ணீர் வறண்டதால், கடந்த வாரம் தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு தண்ணீர் திறந்துவிட திட்டமிட்டு அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். இதே நிலை நீடித்தால் தலைநகரில் காலி குடங்களுடன் மக்களுக்கு குடிநீருக்கு திண்டாடும் நிலை வெகு தொலைவில் இல்லை. தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த காற்றழுத்தாவது சென்னைக்கு கரிசனம் காட்டாதா என அதிகாரிகள் காத்திருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு மழை வேண்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோயில்களில் சிறப்பு பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது. இயற்கை வளங்களை முறையாக பாதுகாத்து, கரன்சிக்கு ஆசைப்பட்டு ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு நீர்நிலைகளை பறிகொடுக்காமல் இருந்திருந்தால் தண்ணீர் சேமித்து வைக்க இடம் கிடைத்திருக்கும். மழையும் பொழிந்திருக்கும். இயற்கை நமக்கு தந்த வரமான மரங்கள் மற்றும் நீர்நிலைகளை அழித்துவிட்டு தற்போது மழை வேண்டிய சிறப்பு பூஜை செய்து என்ன பயன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: