ஐயப்ப பக்தர்கள் நாளை விரதம் தொடங்குகிறார்கள் : சபரிமலை சீசனை சமாளிக்குமா குமரி?

நாகர்கோவில்: கார்த்திகை மாதம் நாளை பிறப்பதையொட்டி, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

கார்த்திகை மாதம் நாளை (17ம்தேதி) பிறக்கிறது. இதையொட்டி சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் தொடங்கும். இந்த மாதத்தில் நாடு முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வார்கள். கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி ஐயப்ப பக்தர்கள் நாளை முதல் விரதம் இருப்பார்கள். குமரி மாவட்டத்தில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள். சபரிமலை சீசன் தொடங்குவதை யொட்டி, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரியிலும் அதிகளவில் பக்தர்கள் திரள்வார்கள்.

இதனால் கன்னியாகுமரியிலும் இனி வரும் 3 மாதங்களும் கூட்டம் அலைமோதும். மாலை அணியும் ஐயப்ப பக்தர்களுக்காக கடைகளில் துளசிமணி மாலை, ருத்ராட்ச மாலை உள்ளிட்டவை விற்பனைக்காக உள்ளன. காவி மற்றும் கருப்பு ேவஷ்டிகளும் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோயில்களில் நாளை சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. நாகர்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில், பார்வதிபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் நாளை காலை மாலை அணிவிகிறார்கள்.

 பல்வேறு கோயில்களில் நாளை அன்னதானமும் நடக்கிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம்  தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பார்வதிபுரம், மார்த்தாண்டம் பகுதியில் மேம்பால பணிகள் நடக்கிறது. இதில் மார்த்தாண்டத்தில் பாலப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. பாலத்தின் மேல் பகுதி பணிகள் முடிவடைந்து மக்கள் பார்வைக்கு ஒருநாள் திறக்கப்பட்டது. பார்வதிபுரத்தில் மேம்பால பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த நிலையில் நாளை முதல்  சபரிமலை சீசன் தொடங்குவதையொட்டி இனி இந்த சாலையில் வாகன ேபாக்குவரத்து அதிகரிக்கும். ஏற்கனவே வாகனங்கள் சென்று வரும் மாற்று பாதைகள் மோசமாக உள்ளன. இந்த நிலையில் வாகனங்கள் அதிகரிக்கும் நிலையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. எனவே இதை எதிர் ெகாள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கன்னியாகுமரியில் வழக்கமாக சபரிமலை சீசன் காலத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்படும். தற்போது நடமாடும் கழிவறைகள், பாதுகாப்பு மிதவை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: