நாகர்கோவிலில் கழிவு நீர் வீடுகளில் புகுந்தது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. நள்ளிரவில் கனமழையும் இருந்தது. இந்த மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல இடங்களில் கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி சாலையில் ஓடின. நாகர்கோவில் 29 வது வார்டுக்குட்பட்ட சின்னராசிங்கன் தெரு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. நேற்று இரவு பெய்த மழை காரணமாக இந்த பகுதியில் சாக்கடை நிரம்பி சாலையில் பெருக்கெடுத்தது. முறையாக கழிவு நீர் கால்வாயை தூர்வாராததால், சாக்கடை நிரம்பி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களும் கழிவு நீரில் மூழ்கின. நேரம் செல்ல, செல்ல தண்ணீர் அதிகரித்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் வெளியே செல்ல முடிய வில்லை. காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டிய மாணவ, மாணவிகள்  கழிவு நீரில் தான் நடந்து சென்றனர். துர்நாற்றமும் அதிகமாக வீசியது.

ஏற்கனவே கொசு புழுக்களால் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கழிவு நீர் ஆறாக ஓடியதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். அந்த தண்ணீரில் பல்வேறு கழிவு பொருட்களும் மிதந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அங்கு சென்றார். அவருடன் முன்னாள் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், சீத்தா முருகன் உள்ளிட்டோரும் வந்து இருந்தனர்.

உடனடியாக நகராட்சி அதிகாரிகளை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தொடர்பு கொண்டு சாக்கடை தண்ணீரை  வெளியேற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து நகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரமணியம், நகர் நல அலுவலர் கிங்சால், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்தன. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழை பெய்யும் நேரங்களில் இது போன்று அடிக்கடி கழிவு நீர் வீடுகளுக்குள் வருகிறது. 2, 3 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. கழிவு நீர் கால்வாய்களை முறையாக சுத்தம் செய்வதில்லை. பல முறை நகராட்சி அதிகாரிகளிடம்  கூறினால் அவர்கள் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள் என்றனர். அதிகாரிகள் கூறுகையில், திருவனந்தபுரம் சாலையின் குறுக்கே கழிவு நீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள கற்கள் பெயர்ந்துள்ளன.

சாலையை தோண்டினால் தான்  அதை சரி செய்ய முடியும். இதற்காக தேசிய நெடுஞ்சாலை அனுமதி பெற வேண்டும் என்றார்.

மக்கள் பணிகளில் அக்கறை இல்லை: சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கடும் தாக்கு

சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது : நாகர்கோவில் நகரில் டெங்கு, பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதை எல்லாம் ஆய்வு செய்யாத கமிஷனர் சரவணக்குமார் வீடுகளை ஆய்வு செய்து, ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார். முதலில் அவரது நிர்வாகத்துக்கு கீழ் உள்ள சாக்கடைகள் மற்றும் குப்பைகளை முறையாக அள்ள அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து விளம்பரத்துக்காக ஸ்டிக்கர்களை அச்சிட்டு அவற்றை வீடுகளில் ஒட்டி போஸ் கொடுக்கிறார். வெறும் விளம்பர பிரியராக உள்ளார். மக்கள் பணியில் அவருக்கு அக்கறை இல்லை.  நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பலமுறை கோரிக்கை வைத்தும் இதை கமிஷனர் சரவணக்குமார் கண்டு கொள்ள வில்லை. கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி இருந்தாலே மழை நேரங்களில் தண்ணீர் செல்லும். அதை விடுத்து, தனி அறைக்குள் இருந்து கொண்டு ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தான் கமிஷனர் சரவணக்குமார் ஆர்வம் காட்டுகிறார். உடனடியாக மக்களுக்கு தேவையான பணிகளை கமிஷனர் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் விரைவில் பொதுமக்களை திரட்டி நகராட்சி கமிஷனரை கண்டித்து எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: