260 படகுகள் கடலில் அடித்து செல்லப்பட்டன : புதுகையை புரட்டிப்போட்டது புயல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இரவு நேரத்தில் புயல் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் இரவில் பாதிப்பு இல்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் புயலின் தாக்கம் அதிகரித்தது. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கடற்கரை பகுதியை விட நிலப்பகுதிகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை நகர் பகுதியில் 5 மணி முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. புதுக்குளம் முருகன் கோயில் அருகே மரம் விழுந்து மின் கம்பிகள் அறுந்தது. கீழ 4ம் வீதியில் ராஜாகுளக்கரையில் மரம் அடியோடு சாய்ந்தது. டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது. இதேபோல் 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.அறந்தாங்கி பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் பலத்த மழை கொட்டி வருகிறது. சூறாவளி காற்றால் பல்வேறு பகுதிகளில் மா, வாழை, பலா, தென்னை மரங்கள் சாய்ந்தன. சாலையோரங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளில் மேற்கூரை பறந்து சேதமடைந்தது. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அறந்தாங்கி மேற்பனைக்காடு பள்ளியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கந்தர்வகோட்டையிலும் அதிகாலை முதல் பலத்த மழை கொட்டுகிறது. காலை முதல் காற்றின் வேகம் கடுமையாக அதிகரித்துள்ளது. நாவல் ஏரி பகுதியில் குடிசை வீட்டில் இருந்த 27 நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த 87 பேரையும் ஆர்.ஐ. செந்தில்குமார், விஏஓ கருப்பையா ஆகியோர் கந்தர்வகோட்டை தனியார் திருமண மகாலில் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.மணமேல்குடி பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அனைத்து படகுகளும் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணி முதல் கடலின் நீர்மட்டம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதில் பொன்னகரத்தில் சுமார் 100 மீட்டர் கடல் உள்வாங்கியது. . பேய் காற்றால் கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம் கடற்கரை பகுதிகளில் நிறுத்தியிருந்த 200க்கும் மேற்பட்ட விசைபடகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. கோட்டைப்பட்டினத்தில் 60 விசைபடகுகள் கடலில் இழுத்து செல்லப்பட்டு புதுகுடியில் கரை ஒதுங்கியது. 200 நாட்டுப்படகுகள் சேதமடைந்ததுடன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

மணமேல்குடி தாலூக்காவிற்கு உட்பட்ட கட்டுமாவடி, பிள்ளையர்த்திடல், அந்தோணியார்புரம், கோட்டைபட்டிணம், பாலக்குடி, மணமேல்குடி ஆகிய பாதுகாப்பு முகாம்களில் 500க்கும் மேற்பட்ட கடற்கரையோர மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தனியார் திருமண மண்டபம் வாடகைக்கு எடுக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் மா, பலா, வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது. வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம் கிராமங்களில் மா, பலா, வாழை, தென்னை மரங்கள் அதிகளவில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் இருந்த 500க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர். 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: