கஜா புயல் சேதங்களை கணக்கீடு செய்து அறிக்கை தர மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு : முதல்வர் அறிக்கை

சென்னை : கஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னதாக வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கன மழை பெய்து வருகின்றது.

இதற்கிடையே கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். கஜா புயலில் சிக்கி 216 குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயல் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சிரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் புயல் பாதித்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இரவு பகலாக மீட்பு பணி நடைபெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரங்களை பின்வரும் பட்டியலில் காணலாம்

1. கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 185 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

2. கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று பரிசோதிக்க 216 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

3. கஜா புயலுக்கு முன் 81,948 பேர் வெளியேற்றப்பட்டு 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதுடன், உணவு, பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகின்றன.

4. புயல் பாதித்த மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

5.முதற்கட்ட அறிக்கைப்படி சுமார் 13,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன, 5,000 மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.

6.கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீர் செய்ய அனைத்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்/

7.கஜா புயல் காற்றால் சாய்ந்துள்ள 13 ஆயிரம் மின் கம்பங்களை சீர்செய்து, மின் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

8. நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார் அனுப்பப்பட்டுள்ளனர்.

9.கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து கணக்கிடு செய்யுமாறு ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

10.கஜா புயல், மழையால் பயிர் சேதம், வீடுகள், மீன்பிடிப் படகுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் பற்றி அறிக்கை தர அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

11. கஜா புயல் பாதித்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க நாகை மாவட்டத்திற்கு ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்திற்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: