ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயல் : குழந்தைகள் உட்பட 23 பேர் பலியான சோகம்

புதுக்கோட்டை: கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக்கடலில் உருவான கற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை மற்றும் பலத்த காற்று வீசியது. இதனால் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து முடங்கியது. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செல்போன் கோபுரங்கள் முறிந்து விழுந்ததில் தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக 82,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மரங்கள் முறிந்து விழுந்தும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், மின்னல் தாக்கியும் 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளது.

பலியானவர்களின் முழு விவரம்:,

கடலூர் மாவட்டத்தில் 3 பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்தார். இதே போல் விருத்தாச்சலம் மேமாத்தூரில் சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மரம் விழுந்து ரங்கநாதன் என்பவர் பலியானார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் மின்னல் தாக்கி பேபி அம்மாள்(75) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பிரியாமணி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் பிரியாமணியின் தந்தை துளசி, தாய் லட்சுமி, சகோதரி பிரியதர்ஷினி ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிவகங்கையில் சுவர் இடிந்து ஒருவர் பலி

சிவகங்கையில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முத்துமுருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். இதே போல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பலத்த சூறைக்காற்றால் மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். பேரூராட்சி சுய உதவிக் குழு பணியாளராக பணிபுரிந்து வந்த எலிசபெத் சாலையில் நடந்து சென்ற போது மரம் விழுந்தது.

திருவாரூரில் 2 பேர் உயிரிழப்பு

கஜா புயல் காரணமாக திருவாரூரில் சுவர் இடிந்து விழுந்ததில் குடவாசல் பகுதியில் ராமகிருஷ்ணன், கோவில்வெண்ணி பகுதியில் கனகவள்ளி ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவர் இடிந்து பெண் குழந்தை பலி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை திராவிட மணி உயிரிழந்தார்.

மரம் விழுந்து பெண் பலி

கஜா புயல் காரணமாக கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். காரில் சிக்கிய ஒரு ஆணும், குழந்தையும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இடிந்து 5 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இடிந்து மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலங்குடியில் ரெங்கசாமி மற்றும் புதுக்கோட்டையில் மேகலா என்ற 6 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர். அன்னவாசலில் சீதாயி (63),விராலிமலையில் ஈஸ்வரி (24) , ரெத்தினக்கோட்டையில் பொன்னம்மாள் (50) ஆகியோரும் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

ரூ.10 லட்சம் நிதியுதவி

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் புயலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.25,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: