இரண்டாம் சீசன் நிறைவடைந்தும் ஊட்டியில் குவியும் மாணவர்கள் சுற்றுலா தலங்கள் களைகட்டுகிறது

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, முதல் சீசன் மற்றும் இரண்டாம் சீசன்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இரண்டாம் சீசன் போது, முதல் சீசன் போன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்காது. எனினும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள். குறிப்பாக, இவ்விரு மாதங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள். இந்நிலையில், இம்முறையும் வழக்கம் போல், கடந்த இரு மாதங்கள் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இரண்டாம் சீசன் முடிந்த நிலையில் தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரம் உள்ளிட்ட அனைத்து அலங்காரங்களும் தற்போது அகற்றப்பட்டு வருகிறது.

எனினும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தபாடில்லை. குறிப்பாக, வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்கு கிழமைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுவும் கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் கல்வி சுற்றுலா வாகனங்கள் அதிகளவு வருகின்றன. சீசன் முடிந்தும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாத நிலையில், இவர்கள் மலை ரயிலில் பயணிக்கு ஆர்வம் காட்டுகின்றனர், இதனால் மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மலைகளின் நடுவே தவழ்ந்து செல்லும் இந்த மலை ரயிலில் பயணித்த மாணவ, மாணவிகள் குகைகள் மற்றும் மலை சரிவுகளில் செல்லும் போது கூச்சலிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: