கஜா புயல் : தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் - மின்சாரத்துறை

சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்தது. இதற்கிடையே கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் இதுவரை 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். கஜா புயலில் சிக்கி 216 குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.

கஜா புயல் காரணமாக மொத்தமாக 12,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மட்டும் 5000 மின் கம்பங்களும், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 5000 மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. கடலூரில் 1000 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 3000 மின்கம்பங்கள், 32 மின்மாற்றிகள் கஜா புயல் காரணமாக சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மற்ற மாவட்டங்களில் இன்று மாலையே மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்த மின்சாரத்துறை, கஜா புயலால் 12 ஆயிரம் மின்கம்பங்கள், 112 துணை மின் நிலையங்கள், 495 மின் கடத்திகள், 100 மின் மாற்றிகள் சேதம் அடைந்துள்ளது என்றும் 7000 மின் கம்பங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியில் இருந்து ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன என்றும் மேலும், 60,000 மின்கம்பங்கள் மற்றும் தளவாடங்கள் மின்வாரியத்தின் கையிருப்பில் உள்ளது என்றும் மின்சாரத்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: