துறைமங்கலம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பு : நீர்நிலைகள் பாதிக்கும் அபாயம்

பெரம்பலூர்: துறைமங்கலம் ஏரியில் மண் எடுக்க அனுமதி பெற்று கிணறு போல் பள்ளம் தோண்டும் டிராக்டர்களால் நீர்நிலைகள் உருக்குலையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. இவை தவிர வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் கட்டுப்பாட்டில் 100க்கும் மேற்பட்ட சிறு குளங்களும், குட்டைகளும் உள்ளன. இவற்றில் குடிமராமத்துப்பணிகள் மூலம் ஆழப்படுத்த பலநூறு கோடிகளை அரசு ஒதுக்கியும் அந்த பணிகள் ஏனோதானோ என்று செய்து முடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வயல்களுக்கு வண்டல் மண் அடிக்கவும், நிலங்களை, வீடுகளை சமன்படுத்த சவுடுமண் அடிக்கவும் வருவாய்த்துறையிடம் அனுமதி பெற்று மாவட்ட அளவில் பல ஏரிகளில் ஏரிகளை சீர்குலைக்கும் சம்பவங்கள் சத்தமின்றி அரங்கேறி வருகின்றன. யாருக்கும் தெரியாத கிராமப்புறங்களில் நடப்பது நாடறிய வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெரம்பலூர் தேசியநெடுஞ்சாலையில் ஊரே தெரிய ஏரியை உருக்குலைக்கும் சம்பவம் நடந்துவருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் ஏரியில் சமீபகாலமாக வண் டல் மண்ணோடு, சவுடுமண் சேர்த்தெடுக்க வருவாய்த்துறை மூலம் பர்மிட் வாங்கிக் கொள்ளும் சிலர் டிராக்டர்கள்மூலம் ஏரியை குடைந்தெடுத்து கிணறு வெட்டுவதுபோல் வண்டல்மண்ணுக்குக் கிழே வெள்ளை பராச்சியையும் தோண்டியெடுத்து ஏரியை சீர் குலைத்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரனிடம் கேட்டபோது, வருவாய்த்துறைதான் வண்டல் மண்ணோடு சவுடுமண் எடுக்கவும் அனுமதி தந்து விடுகிறார்கள். அதனை பயன்படுத்தி அனுமதி பெற்றவர்கள் கனிம வளங்களைக் கொள்ளைடித்து ஏரியையே உருக்குலைத்து வருகின்றனர். இதனைத்தடுக்க பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர்கள் நேரில் சென்று எச்சரித்து வருகின்றனர். இதுகுறித்து வருகிற கூட்டத்தில் டிராக்டர் உரிமையாளர்களிடம், லாரி உரிமையாளர்களிடம் எச்சரிக்கப்படும். மீறி செயல்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்ய பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: