இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 144 தடை உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்க உள்ள நிலையில் இங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், அய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு அறிவித்தது. இதற்கிடையில், நவ.17 அன்று சபரிமலை செல்ல உள்ளதாக அறிவித்திருந்த திருப்தி தேசாயும் இன்று கொச்சி வந்துள்ளார். இதனால் கேரளாவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கேரள அரசின் முடிவை எதிர்த்தும் தற்போது பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. திருப்தி தேசாய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சி விமான நிலையம் முன் அதிகாலை முதலே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சபரிமலையில் இன்று நடை திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதற்கிடையில் போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளதால் சபரிமலையில் சன்னிதானம், நிலக்கல், பம்பை, உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: