ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கோஹ்லி எச்சரிக்கை சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம்!: புறப்பட்டது இந்திய அணி

மும்பை: ‘‘களத்தில் எங்களை சீண்டினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். சரியான பதிலடி தருவோம். யாரையும் சீண்டும் வேலையை முதலில் ஆரம்பிக்க மாட்டோம். இப்போது நான் பக்குவமடைந்து விட்டேன்’’ என ஆஸ்திரேலியா புறப்படும் முன்பாக அனல் தெறிக்க பேட்டி தந்துள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி வரும் 21ம் தேதி பிரிஸ்பேனில் நடக்கிறது. இதற்கான கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மும்பையிலிருந்து நேற்று புறப்பட்டுச் சென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அங்கு விளையாடிய 44 போட்டியில் 5ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. 28 டெஸ்டில் தோற்றுள்ளது. பொதுவாக, ஆஸ்திரேலியா என்றாலே சீண்டலுக்கும், ஆக்ரோஷத்திற்கும் பஞ்சமிருக்காது. களத்தில் எதிரணி வீரர்களை சீண்டி, கேலி செய்து அவர்களின் கவனத்தை சிதறடித்து வெற்றி காண்பதில் கைதேர்ந்தவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். தற்போது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியே தடுமாறிப் போய் உள்ளது.

Advertising
Advertising

புதிய கேப்டன் பெய்னி தலைமையிலான ஆஸ்திரேலியா ரொம்பவே சாந்தமாகி விட்டது. ஆனாலும், அவர்களின் சொந்த மண்ணில் போட்டி நடக்கிறது என்பதற்காக, இந்தியாவை சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம் என இப்போதே சூட்டை கிளப்பி இருக்கிறார் கேப்டன் கோஹ்லி. ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்பாக, இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து தொடரில் பெற்ற தோல்வியின் மூலம் நிறைய கற்றுள்ளோம். உண்மையில் அந்த தொடரில் நாங்கள் சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம். அதே போல தவறுகளையும் அதிகம் செய்து விட்டோம். தற்போது நமது அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. பேட்டிங்கில்தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் சிறப்பான பங்களிப்பை தர வேண்டியது அவசியம். குறிப்பாக பேட்ஸ்மேன்கள். இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய தொடரில் கவனம் செலுத்துவோம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுகளத்தில் நாங்கள் எந்த வீண் வம்புக்கும் செல்ல மாட்டோம். அதே நேரத்தில், வம்புக்கு இழுத்தால் சும்மாவும் இருக்க மாட்டோம். எந்த மாதிரியான வகையில் அவர்கள் விளையாடுகிறார்களே அதே போன்ற பதிலடியை தாங்கள் தருவோம். போட்டியின் மீது கவனம் செலுத்தி, எங்களின் ஆற்றலை இழக்கக் கூடாது என்பதில் கவனமுடன் இருப்போம். எங்களின் முக்கிய இலக்கு வெற்றி தான். பக்குவப்படாத இளம் வயதில் நானும் சில தவறுகளை செய்துள்ளேன். களத்தில் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் ஆக்ரோஷப்பட்டுள்ளேன். சீண்டியிருக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தற்போது அணியின் கேப்டனாக, எந்த நிலையிலும் அணியின் நலனைத்தவிர வேறெதையும் நினைத்துக் பார்க்க முடியாது. தற்போது பக்குவப்பட்டுள்ளதால் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ஆமாம் சாமியா ரவி சாஸ்திரி?

அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘‘எல்லா விஷயத்திற்கும் தலையாட்டி ‘ஆமாம்’ போடுபவராக ரவி சாஸ்திரியை சித்தரிப்பது வேதனையாக இருக்கிறது. அவரைப் போல் இந்திய கிரிக்கெட்டில் இல்லை என அதிகமுறை கூறியவர்கள் இதற்கு முன் இருப்பார்களா என தெரியவில்லை. நான் சந்தித்த நேர்மையான மனிதர்களில் அவரும் ஒருவர். எனது ஆட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர். இந்திய அணியின் வளர்ச்சியில் ரவி சாஸ்திரியின் பங்கு மிக முக்கியமானது. அணி மேலாண்மையிலும் திறமையாக செயல்படுபவர் அவர்’’ என புகழ்பாடினார். தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘‘உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போதுள்ள வீரர்களே தொடர்வார்கள். அதில் எந்த நீக்கமும் இருக்காது’’ என கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: