டயர் இல்லாமல் ரிம்மில் ஓடி தீப்பொறி பறந்தது குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய டிரைவர் கைது: ெபங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூரு: பெங்களூருவில் டயர் இல்லாமல் ரிம்மில் ஓடிய கார் சாலையில் தீப்பொறி  தெறிக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு  காமாட்சிபாளையம் சரகத்திற்குட்பட்ட லக்கரேவில் இருந்து சும்மனஹள்ளி  செல்லும் சாலையில் நேற்று முன்தினம் வெள்ளை நிற கார் ஒன்று கட்டுப்பாட்டை  இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி கொண்டிருந்தது. அந்த வழியாக சென்ற பைக்  ஓட்டிகள் மற்றும் காரில் சென்ற தம்பதிகள் அதைப்பார்த்து, வாகனத்தை நிறுத்த  முயற்சித்தனர். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் சென்றார். மேலும் காரின் முன் டயர் வெடித்து சிதறி, வெறும் ரிம் மட்டுமே  இருந்தது. அது சாலையில் உரசியபடி சென்றதால் தீப்பொறி கிளம்பியது. பெரும்  ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சென்ற அந்த வாகனம், சாலையோரம் நின்ற சில பைக்,  மற்றும் கார்களையும் சேதப்படுத்தியது.

இதை கவனித்தப்படியே பின்தொடர்ந்த  பைக் பயணிகள் சுமார் 4 கி.மீ வரை வாகனத்தை துரத்தி சென்று மடக்கினர். வாகன  ஓட்டியை பத்திரமாக மீட்ட மக்கள் அவரிடம் பேசியபோது, அவர் குடிபோதையில்  இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காமாட்சிப்பாளையம் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று கார் டிரைவரை கைது செய்தனர்.  விசாரணையில் அவர் ஹாசனைச் சேர்ந்த லோகேஷ் என்று தெரியவந்தது. நள்ளிரவு  குடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்திருப்பது  தெரியவந்தது. இதுகுறித்து காமாட்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சம்பந்தப்பட்ட காரை பறிமுதல் செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: