ஐகோர்ட் நீதிபதி பாஸ்கரன் ஓய்வு சத்துருஹானா புஜாரி இடமாற்றம்: நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக குறைந்தது

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் நேற்று ஓய்வு பெற்றார். நீதிபதி சத்துருஹானா புஜாரி ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த நீதிபதி எஸ்.பாஸ்கரன்  நேற்று ஓய்வு பெற்றார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த நீதிபதி பாஸ்கரன் கடந்த 1988ல் முன்சீப்பாக பதவியேற்று 2001ல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2016 அக்டோபரில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதேபோன்று, ஒடிசா உயர் நீதிமன்றத்திலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றலாகி வந்தவர் நீதிபதி சத்துருஹானா புஜாரி. இவரை மீண்டும் ஒடிசா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அவர், வரும் 24ம் தேதிக்குள் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும். இந்த 2 நீதிபதிகளுக்கும் நேற்று பிரிவு உபச்சார விழா உயர் நீதிமன்றத்தில் நடந்தது.   இதில் கலந்து கொண்டு பேசிய அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண், பணி காலத்தில் இரண்டு நீதிபதிகளும் சிறப்பாக பணியாற்றியதாக  தெரிவித்தார்.

அதற்கு 2 நீதிபதிகளும், தங்களுடைய பணிக்காலத்தில் தங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த  அலுவலர்கள்,  சக நீதிபதிகள், வக்கீல்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.  ஒரு நீதிபதி ஓய்வு, ஒரு நீதிபதி பணியிட மாற்றத்தால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக குறைந்துள்ளது. தற்போது 16 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: