தகுதி நீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு தீர்ப்பு நகல் அனுப்பப்பட்டது: விரைவில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை தமிழக அரசு நேற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. அதன்படி, இந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், டிடிவி.தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மீது கடந்த மாதம் 25ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று நீதிபதி அறிவித்தார்.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை, இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக டிடிவி.தினகரன் கூறினார்.இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் இறுதி நகல் சில நாட்களுக்கு முன் தமிழக அரசுக்கு கிடைத்தது. அதன் நகலை தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு அனுப்பி வைத்தார். அவர், அதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார். தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள் ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவர்கள் நீதிமன்றம் சென்றதால், இடைத்தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த வழக்கின் தீர்ப்பு நகல் நேற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அதை பரிசீலித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தலை நடத்தும் பணிகளை தொடங்கும். மேலும், தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகள் ஏற்கனவே காலியாக உள்ளது. தற்போது இந்த 18 தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: