ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் கூத்தடிக்கின்றனர்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் தடாலடி பேட்டி

சென்னை: பாஜவின் ஊது குழலாகவே ரஜினியின் செயல்பாடு உள்ளது என்றும், ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் கூத்தடிக்கின்றனர் என்றும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார்.  முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இரா.மனோகர் ஏற்பாட்டில், நேற்று சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு மையத்தில் நடந்தது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் சுப்பராயன், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ஆறுமுக நயினார், விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் சிந்தனை செல்வன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோதி, ஏ.ஜி.சிதம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்தின் பேச்சு இரட்டை வேடம் போடுவதுபோல உள்ளது.  ரஜினி முதல் நாள் பேசியது சொந்தக் கருத்து. இரண்டாம் நாள் பேசியது குருமூர்த்தியை பார்த்துவிட்டு பேசிய பேச்சு. எனவே பாஜகவின் ஊது குழலாகதான் ரஜினிகாந்தின் செயல்பாடு இருக்கிறது.  அதைதான் இன்றைக்கு ரஜினிகாந்த் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நல்ல நண்பர் என்ற முறையில் அவருக்கு சொல்வது என்னவென்றால் அவர் கட்சி தொடங்க மாட்டார். ஒருவேளை கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் தயவு செய்து ஆரம்பிக்காதீர்கள்  என்று தான் சொல்வேன்.

மோடிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கண்டுபிடித்த தமிழிசைக்குதான் நோபல் பரிசு தர வேண்டும். தமிழிசை பேச்சுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போது இருக்கின்ற நிலையை விட மிக வேகமாக செயல்பட வேண்டும். கமல் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளதாக இருக்கின்றார். எனவே அவருடன் கூட்டணி வைப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் யார் குற்றவாளியாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம் என கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்திருக்கிறது என்று சொன்னால் அது தேர்தலுக்காக அல்ல. மதசார்பற்ற நாடாக இந்த நாடு நீடிக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாடு கெட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

திருநாவுக்கரசர் மீது தாக்கு

மேலும் அவர் கூறுகையில், ‘‘மறைந்த பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்த நினைத்திருந்தேன். ஆனால், சத்தியமூர்த்தி பவனில் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து கொண்டாடிய சில நல்லவர்கள் வருவதாக கூறினர். அவர்கள் முகத்தில் விழிக்கக்கூடாது என்பதற்காக நான் அங்கு செல்லவில்லை. ஆனாலும், நேருவுக்கு மரியாதை செலுத்தவில்லையே என்ற மனவருத்தத்தில் இருந்தேன். அதை ராயபுரம் மனோ நிறைவேற்றி தந்துவிட்டார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: