பிபிஎப்பில் போட்ட பணம் அவசரத்துக்கு உதவுமா?

வரி விதிப்பில் இருந்து தப்புவதற்காகவே சிலர் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் பிபிஎப்பும் ஒன்று. பொது சேமநல நிதி எனப்படும் இந்த திட்டத்தில் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் வட்டியும் அதிகம்தான். இதில் முன்பு 12 சதவீத வட்டி இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து 7.6 சதவீதமாக குறைந்தது.  மீண்டும் உயர்த்தப்பட்டு தற்போது 8 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த முதலீட்டுக்கு கிடைக்கம் வட்டி மற்றும்  முதிர்வு தொகைக்கு வரி கிடையாது.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

இந்த திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 500 ரூபாய்  முதல் அதிக பட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டு காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுக்கு முன்பு கணக்கை மூடிவிட்டு முழு பணத்தையும் எடுக்க முடியாது. இருப்பினும், 5 நிதியாண்டுகள் முடிவடைந்து, முதலீடு செய்தவர் அல்லது அவரது மனைவி மகன், சார்ந்து வாழும் பெற்றோர் ஆகியோருக்கு உயிருக்கு ஆபத்தான நோய் சிகிச்சை, உயர் கல்வி போன்றவற்றுக்கு மட்டும் நிபந்தனை விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுவதுண்டு.

கடன் தொகை

பிபிஎப்பில் முதலீடு செய்து ஒரு நிதியாண்டுக்கு பிறகு அதில் இருந்து பணத்தை எடுக்க முடியும். உதாரணமாக, 2016 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 2017 மார்ச் 31க்கு இடைப்பட்ட காலத்தில் பிபிஎப்பில் முதன் முதலாக முதலீடு செய்திருந்தால், 2018 ஏப்ரல் 1 நிதியாண்டு தொடங்கிய பிறகு இதில் உள்ள பணத்தை அவசர தேவைக்கு எடுக்கலாம்.  2வது நிதியாண்டு இறுதியில் உள்ள இருப்பில் அதிகபட்சமாக 25 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது நடப்பு நிதியாண்டில் பணம் எடுக்க வேண்டுமானால், 2017 மார்ச் 31 வரை உள்ள இருப்பில் அதிகபட்சம் 25 சதவீதம் கோரலாம்.

கணக்கு துவக்கிய பிறகு, முழுமையாக 5 நிதியாண்டுகள் முடியும் வரை படிவம் டியில் விண்ணப்பிக்க வேண்டும். 2016-17 நிதியாண்டில் பிபிஎப் கணக்கு துவக்கியிருந்தால், 2018-19 நிதியாண்டில் இருந்து 2022-23 நிதியாண்டு வரை மேற்கண்ட படிவத்தை பயன்படுத்தி கடன் தொகை கோர முடியும்.     

திருப்பி செலுத்துவது எப்படி?

நீங்கள் எடுக்கும் கடன் தொகைக்கான வட்டி கிடைக்காது. இதுபோக, ஆண்டுக்கு 2 சதவீத வட்டியில் இதை திருப்பி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால், ஆண்டுக்கு 6 சதவீதம் அபராத வட்டி செலுத்த வேண்டும். முதலில் கடன் தொகையும் பின்னர் வட்டியும் செலுத்தவேண்டும். செலுத்தப்படாத வட்டி பிபிஎப் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.

முதிர்வு காலத்துக்குள் முன்பணம் எடுத்தல்

பிபிஎப் கணக்கு துவங்கி முதல் 5 நிதியாண்டுகள் முடிந்த பிறகு அதில் கடன் தொகை பெற முடியாது. ஆனால், முதிர்வுக்கு முன்பே பணம் எடுக்கலாம். இதற்கு படிவம் சி சமர்ப்பிக்க வேண்டும். இதில், இருப்பில் உள்ள தொகையில் அதிகபட்சம் 50 சதவீதம் எடுக்க முடியும். ஒரு வேளை அதற்கு முன்பு வாங்கிய கடன் தொகை நிலுவையில் இருந்தால், இது கழித்துக்கொண்ட பிறகு எஞ்சிய தொகையில் முன்கூட்டி பணம் எடுக்க முடியும். முதலீட்டு தவணையை முறையாக செலுத்தாதவர்களுக்கு பணம் வழங்கப்பட மாட்டாது.

15 ஆண்டுக்கு பிறகு

பிபிஎப் திட்டத்தில் 15 ஆண்டுக்கு முதலீடு செய்யலாம். அதன்பிறகு விரும்பினால் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்க முடியும். இதற்கு படிவம் எச் வழங்க வேண்டும். நீட்டிப்பு கோரிய பிறகு, அதிகபட்சமாக இருப்பு தொகையில் 60 சதவீதம் பெற முடியும். முதிர்வடையும் முன்பே எடுக்கலாமா? பொதுவாக பிபிஎப் கணக்கை 15 ஆண்டுக்கு முன்பு மூட முடியாது. இருப்பினும் 5 ஆண்டு முடிந்த பிறகு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

முதலீடு செய்தவர் அல்லது அவரது மனைவி, அவரை சார்ந்து வாழும் குழந்தைகள் ஆபத்தான நோய்வாய்ப்பட்டிருந்தால் கணக்கை நிரந்தரமாக மூடி பணம் எடுக்கலாம். இதுபோல் உயர்கல்வி செலவுக்கு பணம் தேவைப்பட்டால் கணக்கை மூடிவிட்டு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு வட்டி அபராதமாக ஆண்டுக்கு ஒரு சதவீதம் கழித்துக்கொள்ளப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: