ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

கயானா: மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை  52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் இந்த தொடரில், மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் 2 லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளை வென்றது. கயானாவில் நேற்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர் கொண்டது. அயர்லாந்து அணி ஏற்கனவே 2 போட்டிகளில் தோற்றுள்ளது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா துவக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இந்த ஜோடி அயர்லாந்து பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டது. இந்த ஜோடி 10 ஓவரில் 67 ரன் சேர்த்த நிலையில் மந்தனா 33 ரன் (29 பந்து, 1 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோட்ரிகஸ் 18 ரன் (12 பந்து) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனாலும், அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெடுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 51 ரன், மந்தனா 33 ரன் எடுத்தனர்.

இதனையடுத்து 146 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி இந்திய அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.  ஏற்கனவே பி பிரிவில் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: