பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  கள்ள நோட்டை ஒழிக்கவும், கருப்பு பணத்தை மீட்கவும் பழைய 500, 1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 நவம்பரில் அறிவித்தது. இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. அதிக அளவில் செல்லாத நோட்டு தாக்கல் செய்த பலர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதுதொடர்பாக 80,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணைய தலைவர் சுசில் சந்திரா தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறியதாவது:  கடந்த ஆண்டு நேரடி வரி 52 சதவீதமும், மறைமுக வரி வருவாய் 48 சதவீதமும் இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு மறைமுக வரி வருவாயை விட நேரடி வரி அதிகரித்துள்ளது. இதற்கு பணமதிப்பு நீக்கம்தான் காரணம்.  பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதால் அனைத்தும் கணக்கில் வந்து விட்டது. இதை எளிதாக கண்காணிக்க முடிந்தது. பலர் வருமான வரி படிவத்தில் தாக்கல் செய்த தொகைக்கும், செல்லாத நோட்டு டெபாசிட் தொகைக்கும் முரண்பாடு காணப்பட்டது. பலர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை பணதிப்பு நீக்கத்துக்கு பிறகு கணக்கு தாக்கல் செய்யாத சுமார் 3 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதன்பிறகு 2.25 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்து விட்டனர். 80,000 பேர் கணக்கு தாக்கல் செய்யவில்லை.  கடந்த 3 ஆண்டில் மட்டும் 80 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் அதற்கு முன்பு கணக்கு தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டில் 6.02 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 86 லட்சம் பேர் முதன் முறையாக தாக்கல் செய்தவர்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.  வருமான வரி வரம்பில் பலரை சேர்க்க மண்டல வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது  என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: