சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம் தோல்வி: காங், பாஜ உட்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது. கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பரபரப்பான சூழலில் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த பிரச்னை குறித்து விவாதிக்க கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில், திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

இதில் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன், பாஜ தலைவர் தரன்பிள்ளை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன், முஸ்லிம் லீக் சார்பில் முன்னாள் அமைச்சர் முனீர், ஜனபக்‌ஷம் தலைவர் பி.சி.ஜார்ஜ் எம்எல்ஏ உட்பட பல கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய உடன் முதல்வர் பினராய் விஜயன் எழுதி கொண்டு வந்த ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவேண்டிய கட்டாயம் கேரள அரசிற்கு உள்ளது. அரசிற்கு வேறு வழி இல்லை’’ என்றார்.

பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, பாஜ தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை உள்ளிட்ட தலைவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் இளம்பெண்களுக்கு செய்ய வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஆகியவற்றை காரணம் காட்டி உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் பினராய் விஜயன் அதை ஏற்கவில்லை.

சுமார் 2.30 மணி நேரம் நடந்த கூட்டத்தில் இறுதியாக பினராய் விஜயன் பேச தொடங்கினார். அப்போது தங்களது கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்வதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, காங்கிரஸ் தலைவர் முல்லபள்ளி ராமசந்திரன், பா.ஜ. தலைவர் தரன்பிள்ளை, பி.சி.ஜார்ஜ் எம்எல்ஏ ஆகியோர் வெளியேறினர்.

கூட்டத்துக்கு பின்னர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கப்படாத வரை அதை அமல்படுத்துவதுதான் அரசின் முன் உள்ள ஒரே வழியாகும். அரசியல் அமைப்பு சட்டத்தைவிட மத நம்பிக்கைதான் பெரிது என்ற முடிவை அரசால் எடுக்க முடியாது. பாஜ, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் இந்த விஷயத்தில் ஒரே முடிவை எடுத்துள்ளனர்.  1991ல் கேரள உயர் நீதிமன்றம் இளம் பெண்களுக்கு தடை விதித்தபோது அரசு அதை அமல்படுத்தியது. நாளை உச்ச நீதிமன்றம் வேறு ஒரு தீர்ப்பு அளித்தால் அதைத்தான் அரசு அமல்படுத்தும்.

இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்த பிடிவாதமும் கிடையாது. எதிர்க்கட்சிகளுக்குத்தான் பிடிவாதம் உள்ளது. மத நம்பிக்கையாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் வழங்குவது அரசின் கடமையாகும். சபரிமலையில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் இளம் பெண்களுக்கு குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது ெதாடர்பாக தந்திரியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். என்றார். இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், அது தோல்வியில் முடிவடைந்தது.144 தடையுத்தரவு: சபரிமலையில் இன்று மீண்டும் நடை திறப்பதால் போலீஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

அரசிற்கு  வீண் பிடிவாதம்:

கூட்டத்திற்கு பின் ரமேஷ் சென்னித்தலா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சபரிமலை விவகாரத்தில் அரசு வீண் பிடிவாதம் பிடிக்கிறது. சமரசத்திற்கான எந்த நடவடிக்கையிலும் அரசு ஈடுபடவில்லை. இனி சபரிமலையில் என்ன பிரச்னை ஏற்பட்டாலும் அதற்கு பினராய் விஜயன்தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்’’ என்றார்.பாஜ தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், ‘‘சபரிமலை விவகாரத்தில் பினராய் விஜயன் பிடிவாத போக்குடன் செயல்படுகிறார். ஐயப்ப பக்தர்களை அடித்து நொறுக்குவதுதான் அவரது திட்டமாக உள்ளது. சபரிமலை விவகாரத்தில் எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.

தேவசம்போர்டு அவகாசம் கோரும்?

முதல்வர் நடத்திய கூட்டத்தை தொடர்ந்து தேவசம் போர்டு நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கேட்பது என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இன்று இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

சபரிமலை வரவேண்டாம்

அனைத்து கட்சி கூட்டத்துக்கு பின் தந்திரி மற்றும் பந்தளம் அரண்மனை நிர்வாகிகளுடன் முதல்வர் பினராய் விஜயன் ஆலோசனை நடத்தினார். இதில் தந்திரிகள் கண்டரர் மோகனர், கண்டரர் ராஜீவரர், கண்டரர் மகேஸ் மோகனர், பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதி சசிகுமார வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க கூடாது என்று தந்திரிகள் மற்றும் மன்னர் குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால் அதை பினராய் விஜயன் ஏற்கவில்லை.

கூட்டத்திற்கு பிறகு பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த சசிகுமார வர்மா கூறுகையில், ‘‘சபரிமலையில் ஆச்சாரங்களை பின்பற்றுவதில் இருந்து பின்வாங்கமாட்டோம் என்று தெளிவாக விளக்கினோம்’’ என்றார். தந்திரி கண்டரர் ராஜீவரர் கூறுகையில், ‘‘கலவரத்தை தவிர்க்கவேண்டும் என்றால் தயவு செய்து இளம்பெண்கள் சபரிமலை வரவேண்டாம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: