திருப்பதி அருகே அதிகாலை பரபரப்பு: செம்மரம் வெட்ட வந்தவர்கள் மீது ஆந்திர போலீசார் துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது

திருமலை: திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பதி கபில தீர்த்தம் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். பீமாவரம்-முங்கிலிபட்டு இடையே வனப்பகுதியில் சோதனை செய்தனர்.  அங்கிருந்த செம்மரக் கடத்தல்காரர்கள், போலீசார் மீது கற்கள் மற்றும் கோடாரிகளை வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது அங்கிருந்த கடத்தல்காரர்கள் வனப்பகுதியில் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை பிடித்தனர். விசாரணையில் அவர் வாழப்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணி என தெரிந்தது. மேலும், கருமாந்துரையை சேர்ந்த சண்முகம் என்பவர் செம்மரம் வெட்டினால் ஒரு கிலோவிற்கு 600 தருவதாக கூறி பெங்களூரு வழியாக  அழைத்து வந்ததாக தெரிவித்தார். மேலும் தன்னுடன் 8 பேர் வந்ததாக தெரிவித்தார். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேப்போல்  காளஹஸ்தி அடுத்த கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து சிலர் செம்மரங்களை வெட்டி காரில் கடத்த முயன்றனர். போலீசாரை பார்த்தவுடன், செம்மரக்கட்டை மற்றும் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார், காருடன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: