திருவண்ணாமலை அருகே கோயிலில் ஐம்பொன் சிலைகள், கலசங்கள் கொள்ளை : போலீசார் விசாரணை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோவிலில் இருந்த ஐம்பொன் சிலை மற்றும் கோவில் கலசங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு குங்குமநாயகி உடனுறை சோமநாத ஈஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோயில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் இரவு பணியில் காவலர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு கோவிலின் சுற்றுச் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சிவன் பார்வதி உற்சவர் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் கோயிலில் இருந்த மூன்று கோபுர கலசங்களையும் கொள்ளையடித்துள்ளனர். இதையடுத்து இன்று காலை கோயிலுக்கு சென்ற பொதுமக்கள் கோயிலின் பூட்டு உடைந்து கிடைந்ததை பார்த்ததும் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிலைகள் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அம்பாள் சிலையில் இருந்த தாலி உள்ளிட்டவையும் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: