ஏஜிஎஸ் தென்மண்டல கால்பந்து பைனலுக்கு தமிழகம் தகுதி

சென்னை: ஏஜிஎஸ் அலுவலகங்களுக்கு இடையிலான  தென் மண்டல கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றது. இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் சார்பில்  தென் மண்டல அலுவலகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. போட்டியை  வணிக தணிக்கை பிரிவு முதன்மை இயக்குநர் ஆர்.அம்பலவாணன் தொடங்கிவைத்தார்.  போட்டி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு தலைமை கணக்காளர் ஆர்.திருப்பதி வேங்கடசாமி உள்ளிட்ட உயரதிகாரிகள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் தென் மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா-தெலுங்கானா, கேரளா ஏஜிஎஸ் அணிகள் விளையாடுகின்றன. சேத்துபட்டு, நேரு பூங்கா விளையாட்டுத் திடலில் நடந்த முதல் அரை இறுதியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமநிலை வகித்தன. விறுவிறுப்பான 2வது பாதியில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதையடுத்து பெனால்டி ஷூட் -அவுட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தமிழகம் 5 வாய்ப்புகளையும்  சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நிலையில், கர்நாடக அணியின் ஒரு வாய்ப்பை தமிழக கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார். இதையடுத்து தமிழகம் 5-4 என்ற கோல் கணக்கில்  வென்று பைனலுக்கு முன்னேறியது. ஆந்திரா/தெலுங்கானா - கேரள அணிகளிடையே நடந்த 2வது அரை இறுதியில் வெற்றி பெற்ற அணி, இன்று பிற்பகல் நடைபெறும் இறுதிப் போட்டியில்  தமிழகத்தை சந்திக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: