ஐதராபாத் அணியுடன் ரஞ்சி மோதல்..... தமிழக அணி நிதான ஆட்டம்

திருநெல்வேலி: ஐதராபாத் அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர் அபினவ் முகுந்த் சதம் விளாசினார்.  இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன் எடுத்திருந்த ஐதராபாத் அணி நேற்று 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. கேப்டன் அக்‌ஷத் ரெட்டி 250 ரன், சந்தீப் 130, சாய்ராம் 42, மிலிந்த் 33*, மெகதி ஹசன் 14* ரன் எடுத்தனர்.

தமிழக அணி பந்துவீச்சில் முகமது 3, விக்னேஷ், ரகில் ஷா தலா 2, வருண் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம், 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்துள்ளது (79 ஓவர், ரன்ரேட்: 2.06). கவுஷிக் காந்தி 21 ரன், அபராஜித் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அபினவ் முகுந்த் 101 ரன் (239 பந்து, 15 பவுண்டரி), கேப்டன் இந்திரஜித் 24 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, தமிழக அணி இன்னும் 402 ரன் பின்தங்கிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இமாச்சலுக்கு 376 ரன் இலக்கு

 பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி அணியுடன் நடந்து வரும் பி பிரிவு லீக் ஆட்டத்தில், இமாச்சலப்பிரதேச அணிக்கு 376 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் டெல்லி அணி 317 ரன், இமாச்சல் 223 ரன் எடுத்தன. 94 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய டெல்லி 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஷோரி 106*, கம்பீர் 49, தலால் 25, ராணா 32, ஹிம்மத் 26, அனுஜ் 21* ரன் எடுத்தனர்.

இதையடுத்து, 376 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இமாச்சல் அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்துள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணிக்கு இன்னும் 332 ரன் தேவை.

போராடுகிறது மத்தியப்பிரதேசம்

பெங்கால் அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் பி பிரிவு லீக் ஆட்டத்தில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மத்தியப்பிரதேச அணி போராடி வருகிறது. பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 510 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மத்தியப்பிரதேசம் 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்துள்ளது. கை வசம் 5 விக்கெட் இருக்க, அந்த அணி இன்னும் 256 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: