சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ஐடிஎம்ஐ திட்டம் அறிமுகம்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் ஐடிஎம்ஐ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையின மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வண்ணம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் ஐடிஎம்ஐ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளான வகுப்பறை, அறிவியல் கூடம், கணினி அறை, நூலகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள், விடுதிகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்தும் திட்ட மதிப்பீட்டு தொகையில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சம் 50 லட்சம் இதில் எது குறைந்ததோ அத்தொகை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டம் சென்னை மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உறுப்பினராகவும் அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதவிப்பெறுவதற்கான தகுதிகள்: அரசு உதவி பெறும் உதவிபெறாத சிறுபான்மையினரின் பள்ளிகள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இயங்கி மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைப்பெற்றிருக்க வேண்டும்.

இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு www.mhrd.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். மேலும், முதன்மை கல்வி அலுவலர், பள்ளி கல்வி இயக்குநர் வளாகம், சென்னை-08 மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர், சிங்காரவேளர் மாளிகை, சென்னை-1 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்கள், விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பி பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: