திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது? : அட்டவணை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடக்கும் என்பதற்கான அட்டவணையை, தாக்கல் செய்யுமாறு  தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. விதிப்படி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது முதல் 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். கடந்த மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில், தமிழக தலைமை செயலாளர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில்,  வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இரு தொகுதிகளிலும் தற்போதைக்கு தேர்தல் நடத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனால், இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்தாண்டு (2019) நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தினால் அதில் கிடைக்கும் முடிவு அரசியல் கட்சிகளிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை. தேர்தல் விதிப்படி, திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இதுவரையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இங்கு எப்போது தேர்தல் நடத்த முடியும்? அப்படி நடத்தினால் அதற்குரிய தேர்தல் அட்டவணை உள்ளிட்ட விவரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் அபிடவிட்டாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: