திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு  கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளம் முழங்க  தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர்.  இங்கு வேதமந்திரங்களுடன், மகாதீபாராதனைக்கு பிறகு அதிகாலை 5.30 மணிக்கு மேளதாளம் முழங்க  தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர்.அப்போது கோயிலில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்  திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா, அரோகரா’’ என விண்ணதிர முழக்கமிட்டனர்.

வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்பி வனரோஜா, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் விரதம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியதையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். 23ம் தேதி மகாதீபம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 10ம் நாளான வருகிற 23ம் தேதி, அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதைக்காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி வருகிற 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 2,609 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: