புதிய தலைமை செயலக கட்டிட விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை அரசாணையை எதிர்த்து திமுக வழக்கு : உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை:  ஓமந்தூரார்  தோட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் கட்டிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அதிமுக அரசு 2011ல் அமைத்தது. இந்த ஆணையத்தை எதிர்த்து, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது.  இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையம் என்பதே கண்துடைப்பு நாடகம்தான். இதனால் மக்கள் பணம்தான் வீணாகிறது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டது. பின்னர் புதிய தலைமை செயலகம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நீதிபதி ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து, அதை பரிசீலனை செய்யாமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளது. இது சட்ட விரோதமானது, மேலும் அந்த ஆணையம் சட்டப்படி எந்த ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யாதபோது. அவற்றை வைத்து எப்படி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க முடியும் என்று வாதிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிடுகையில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் விசாரணை தொடங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை மட்டுமே நடத்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு மீது முகாந்திரம் உள்ளதாக தெரியவந்தால் தான் விசாரணையை நடத்த அரசு முடிவு செய்தது, என்று வாதிட்டார். பின்னர்  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயாணா, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: