கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளியில் புகுந்து 2 மாணவிகள் உட்பட 4 பேரை கத்தியால் குத்திய டிரைவர்

அருமனை: அருமனை அருகே தனியார் பள்ளியில் அத்துமீறி நுழைந்த அரசு பஸ் டிரைவர், 2 மாணவிகள் உட்பட 4 பேரை கத்தியால் குத்தினார்.  குமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவிகளுக்கு தனியாக தங்கும் விடுதி வசதியும் உள்ளது. நேற்று காலை பள்ளி வளாகத்தில் ஒருவர் திடீரென நுழைந்தார். அப்போது அங்கு நின்ற 3 பள்ளி வேன்களின் கண்ணாடியை உடைத்தார். பின்னர், மாணவிகள் தங்கும் விடுதியில் புகுந்தார். அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களையும், ஜன்னல் கண்ணாடியையும் உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.

இதன்பிறகும் ஆத்திரம் தீராத அவர், பிளஸ்-2 மாணவிகள் 2 பேரை கத்தியால் குத்தினார். இதைக்கண்ட பள்ளி மேலாளர் ஞானமுத்து மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளி சுதீர் ஆகியோர் வந்து தடுத்தனர். அப்போது சுதிரிடம் இருந்த கத்தியை பறித்து 2 பேரையும் வெட்டினார். இதை கண்ட சக மாணவிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர், ரகளையில் ஈடுபட்டவரை பிடித்து வைத்துக்கொண்டு, அருமனை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து, கத்திக்குத்தில் காயமடைந்த மாணவிகள்  மற்றும் ஞானமுத்து, சுதீர் ஆகியோரை அருகில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறிதுநேரத்தில், போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, `அருமனையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜெயன்(48). ெஜயனுக்கும் அவரது சகோதரிக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. அவரது சகோதரி, இதே பள்ளியில்தான் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதனால், பள்ளி தாளாளர், அவரது சகோதரிக்கு உதவி செய்ததால் ஜெயன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். தாளாளர் குடும்பம் பள்ளி விடுதியில் தங்கியிருந்ததை அறிந்து அவர்களை தாக்க வந்தார். அவர்கள் இல்லாததால் மற்றவர்களை தாக்கி உள்ளார்’ என்று தெரிய வந்தது.  இதனையடுத்து ஜெயனை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: